Last Updated:
பும்ரா இல்லையென்றால் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 70% வெற்றி சதவீதத்தை கொண்டுள்ளது.
பும்ரா இல்லையென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அதிகம் வெற்றி பெறுவதாக இணையதளத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில், பிரபல ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான ’ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ வெளியிட்டுள்ள பதிவில், இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா அறிமுகமானதிலிருந்து, இந்தியா அவர் இல்லாமல் விளையாடிய போட்டிகளில் 70% வெற்றியையும், அவர் விளையாடியுள்ள போட்டிகளில் 43% வெற்றியும் பெற்றுள்ளதாக பதிவிட்டிருந்தது.
இந்திய வேகப்பந்துவீச்சில் பும்ரா நிச்சயம் ஒரு முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில், அவர் விளையாடியுள்ள போட்டிகளில் குறைந்த அளவிலேயே வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரிய தகவலாகவே உள்ளது.
இந்த பதிவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், அவர் இதுவரை விளையாடிய 46 போட்டிகளில், 34 போட்டிகள் அந்நிய நாடுகளில் தான் விளையாடியுள்ளார் என்றும், இந்தியா வெற்றி பெற்ற முக்கிய போட்டிகளில் அவரின் பங்கு அலாதியானது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில், பும்ரா இருந்தபோதும் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது. ஆனால் அவர் விளையாடாத இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வாதமும் மேற்கூறிய குற்றச்சாட்டிற்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. ஆனால் பேட்ஸ்மேன்களின் கால்களுக்கும், ஸ்டம்ப்புகளுக்கும், அவர்களின் தலைகளுக்கும் சரியாக குறிவைத்து அவர்களை அச்சுறுத்துவதை வேறு எந்த பவுலர்களை விடவும், பும்ரா சிறப்பாகவே செய்வார். அவர் பந்தை கையில் எடுத்தாலே பேட்ஸ்மேன்களுக்கு அச்சம் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
எனவே புள்ளி விவரங்கள் என்ன சொன்னாலும், உண்மை வேறாக தான் இருக்கும். அவரின் பங்கு இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்கு தெரியும் என்று ரசிகர்களும் பதிவிட்டு வருகிறார்கள்.
July 10, 2025 6:34 PM IST


