Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 வரை வரி விதிப்பை நீட்டித்துள்ளார். மேலும், ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளின் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விதிப்புக்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த ஏப்ரலில் கடுமையான வரிகளை விதித்தது. இதற்கு உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வரி விதிப்பை ஜூலை 9 ஆம் தேதி வரை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
இந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீட்டித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி நிர்ணயம் செய்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதில், அதிகபட்சமாக மியான்மர், லாவோஸ் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 40 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளது.
தாய்லாந்து, கம்போடியாவிற்கு தலா 36 விழுக்காடு வரியும், வங்கதேசம், செர்பியா நாடுகளுக்கு தலா 35 விழுக்காடு வரியும், ஜப்பான், தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியும் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
இதனிடையே, பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
July 08, 2025 10:05 PM IST


