Last Updated:
கர்நாடகாவில், மூடநம்பிக்கையால் பெண் மந்திரவாதி கீதாவை தாக்கியதில், கீதா உயிரிழந்தார்.
கர்நாடகாவில் பேய் விரட்டுவதாகக் கூறி கண்மூடித்தனமாக தாக்கியதில் அப்பாவி பெண் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்தில், பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் சிவமுகா மாவட்டத்தில் உள்ள ஜம்பரகட்டா கிராமத்தில் வசித்தவர், 32 வயதான கீதா. கடந்த சில மாதங்களாக இவருக்கு உடல்நிலை கடும் மோசமடைந்து உடல் மெலிந்து உறக்கத்தை இழந்து தவித்து வந்துள்ளார். இரவில் அடிக்கடி அலறல் சத்தத்துடன் கத்தி கூச்சலிட்டு வந்துள்ளார். எங்கெங்கோ சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல் நிலை சரியாகவில்லை.
இதனால் கீதாவிற்கு பேய் பிடித்திருக்குமோ என்ற சந்தேகம் அவரது குடும்பத்தினரிடையே எழுந்துள்ளது. அங்குதான் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கீதாவை இதே ஊரில் உள்ள பெண் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர், கீதாவுக்கு பேய் பிடித்துள்ளது என்றும், மாந்த்ரீக பூஜை செய்து பேயை விரட்ட வேண்டும் என்றும் கூற, அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்த பெண் மந்திரவாதி, கீதாவை மாந்திரி கட்டத்தில் அமர வைத்து தீ மூட்டி பூஜையைத் தொடங்கினார். ஒருகட்டத்தில் மந்திரத்தை முழங்கி கொண்டே விபூதி அடித்து கையில் இருந்த கம்பால் கண்மூடித்தனமாக கீதாவை அடித்துள்ளார். ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த கீதா, மந்திரவாதியின் அடியை தாங்க முடியாமல் கத்தி கதறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கீதா, மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், கீதாவை மீட்டு உடனே மருத்துவமனைக்குத் தூக்கி சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள், பெண் மந்திரவாதி குறித்து ஹொன்னுார் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே ஊருக்குள் வந்த தனிப்படை போலீசார் பெண் மந்திரவாதியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முறையாக சிகிச்சை அளித்து காப்பாற்றாமல், பேய் பிடித்திருப்பதாக அடித்தே காவு வாங்கி உள்ளனர். மூடநம்பிக்கை சில நேரம் உயிரையும் குடிக்கும் என்பதற்கு கீதாவின் மரணமும் ஒரு சாட்சியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
July 08, 2025 7:52 PM IST
பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணுக்கு மாந்த்ரீக பூஜை.. மந்திரவாதி செய்த அதிர்ச்சி செயல்.. அடுத்து நடந்த ஷாக்!


