பி.ஆர். ராஜன்
நாட்டில் தற்போது ஒரு கிலோ பச்சரிசி 2 ரிங்கிட் 80 சென் என விற்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கோ கிலோ 8 ரிங்கிட்டிலிருந்து 12 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுள் எது விலை அதிகமானது? எது மலிவானது?
பச்சரிசி பற்றாக் குறையைச் சமாளிப்பதற்கு மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடும்படி நாட்டின் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் ஜொஹாரி பின் அப்துல் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.இவருக்கு நடப்பு நாட்டுநிலைமை தெரியுமா? தெரியாதா? பச்சரிசி பற்றாக்குறை என்றால் அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றி சொல்லத் தெரியாத இவருக்கு, அதற்கு மாற்றாக மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடச் சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?


தலைவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அதனைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் பொதுமக்களுக்கு இல்லை. தாங்கள் என்ன சாப்பிட வேண்டும்… என்ன சாப்பிடக்கூடாது என்பதை இவர்கள் சொல்லக்கூடாது. மக்கள் படும்பாடு அரசியல்வாதிகளுக்கு, அமைச்சர்களுக்குத் தெரிகின்றதா என்பதும் தெரியவில்லை.
ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் மரவள்ளிக்கிழங்கைப் பயிரிட்டு முக்கிய உணவாக சாப்பிட்டு வந்தனர். இந்த நிலைக்கு மக்களைக் கொண்டு வந்த ஜப்பானியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
ஆனால், இங்குள்ள தலைவர்கள் நாம் இன்னமும் ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில்தான் இருக்கிறோம் என்ற நினைப்பில் மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடச் சொல்வது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவும் இல்லை, புரியவும் இல்லை.
முதலில் மக்களை மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடச் சொன்னவர்கள் சோற்றுக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடுவார்களா?


அரிசி பற்றாக்குறையைச் சமாளிக்க மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடச் சொல்கின்றனர். அதேபோல் கோழி விலை அதிகரித்தபோது, கோழி இறைச்சியைச் சாப்பிட வேண்டாம் என்று சொன்னார்கள். முட்டை விலை அதிகமாக இருக்கிறது என்று மக்கள் புகார் சொன்னபோது முட்டையைச் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
பெட்ரோல் விலை ஏற்றம் கண்டபோது, அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதைத் தெரிவிக்காமல் சைக்கிளில் செல்லுங்கள் என்று சிலர் ஆலோசனை கூறினர். அதேபோன்று காய்கறி விலைகள் அதிகரித்தபோது புல்லைச் சாப்பிடுங்கள் என்று அவர்கள் சொல்லாமல் விட்டதால் மக்கள் தப்பினர்.
இப்படி ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகள் எழும்போதெல்லாம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இதுபோன்று ஆலோசனை வழங்குவது பொதுமக்களுக்கு கோபத்தை இன்னும் அதிகமாக்குகிறது.


குயுக்தி கொண்ட இவர்களின் இதுபோன்ற ஆலோசனைகளைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்றுகூடத் தெரியவில்லை. ஒரு சாமானியப் பிரஜையின் சிரமங்களைக்கூட தெரியாதவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அதுவும் மெத்தப் படித்தவர்கள் என்பதை நினைக்கும்போது மனம் தீயாகப் பற்றி எரிகிறது.
ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதைச் சொல்வதற்காக இவர்களெல்லாம் பதவியில் இருக்கவில்லை. நாடாளுமன்ற மக்களவையை கண்ணியமாக நடத்தினாலே போதுமானது.
சோறு சாப்பிடுகிறோமா? மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடுகிறோமா? புல்லைச் சாப்பிடுகிறோமா…? இதைத் தீர்மானிக்க வேண்டியது மக்கள்.
தேவையில்லாத ஆலோசனைகளைச் சொல்லி மக்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாக வேண்டாம்.




