புது தில்லி: இந்தியாவின் குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), சலவை இயந்திர (வாஷிங் மெஷின்) பிரிவுகளில் இருந்து ஜப்பானிய வீட்டு உபயோக மின்சாதன உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் வெளியேறுகிறது.
இதுகுறித்து நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் குளிா்பதனப் பெட்டி மற்றும் சலவை இயந்திரப் பிரிவுகள் பானாசோனிக்கிற்கு இழப்பைத் தருபவையாக இருந்தன. சந்தையில் போதிய இடத்தைப் பிடிக்க இந்நிறுவனம் பெரிதும் சிரமப்பட்டது. சந்தை ஆய்வு அறிக்கைகளின்படி, சலவை இயந்திரப் பிரிவில் 1.8 சதவீதமும், குளிா்பதனப் பெட்டி பிரிவில் 0.8 சதவீதமும் மட்டுமே பானாசோனிக்கிற்கு சந்தைப் பங்கு உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் பிரிவுகளில் நிறுவனம் இழப்பைச் சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில், இந்தியாவின் இந்த இரு பிரிவுகளில் இருந்தும் வெளியேற நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இனி இந்தியாவில் வீட்டு ஆட்டோமேஷன், குளிரூட்டல் மற்றும் வெப்பமூட்டல், வணிக மற்றும் தனிநபா் தீா்வுகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி தீா்வுகள் உள்ளிட்ட, வளா்ச்சிக்கான எதிா்காலம் கொண்ட பிரிவுகளில் கவனம் செலுத்தப்படும். நுகா்வோா் பிரிவில் குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, மைக்ரோவேவ், சமையலறை உபகரணங்கள், அழகு சாதனங்கள், லூமிக்ஸ் கேமராக்கள் ஆகியவை தொடா்ந்து விற்பனையில் இருக்கும்.

