Last Updated:
ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயம் உலகப் புகழ்பெற்றதாகும். 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதில், ஒடிசா மட்டும் இன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.
இந்த ஆண்டு ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஜெகநாதர், பாலபத்ரர், சுபத்ரா ஆகிய 3 தேர்களும் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்திச்சா கோவில் வரை இழுக்கப்படும். 9 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஜெகநாதர் ஆலயத்தில் தேர்கள் நிலை நிறுத்தப்படும். இதையொட்டி வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தேரை இழுத்து சாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் குந்திச்சா கோவிலுக்கு மூன்று தேர்களும் வந்தடைந்தன. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் தேரின் சக்கர பகுதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். அப்போது, ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு தேரை நெருங்கியதாக கூறப்படுகிறது.
இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டு வயதானவர்கள் மற்றும் பெண்கள் பலரும் கீழே விழுந்துள்ளனர். எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், இரு பெண்கள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஒடிசாவை சேர்ந்த பிரபாதி தாஸ், பசந்தி சாஹு மற்றும் 70 வயதான பிரேம காந்த் மொஹந்தி என்பது தெரியவந்துள்ளது. படுகாயமடைந்தவர்களில் மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ரத யாத்திரையின் போது போதிய அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் அசம்பாவிதம் நிகழ்ந்ததாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர். மேலும், அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளும் முறையாக செய்யவில்லை என சாடியுள்ளனர்.
விஐபி-களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட செய்யவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரத யாத்திரையில் மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள உயர்மட்டக் குழு அமைத்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
Odisha (Orissa)
June 29, 2025 8:43 PM IST


