Last Updated:
நந்தினி வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்துக்கு தோழிகளுடன் சென்றிருந்தார்.
பெங்களூருவில் 13-வது மாடியில் இருந்து செல்பி எடுத்த இளம்பெண் கால் தவறி கீழே விழந்ததில், பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அடுத்த சூடசந்திரா பகுதியை சேர்ந்தவர் 23 வயதான நந்தினி. இவரது வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்துக்கு தோழிகளுடன் சென்றிருந்தார். அப்போது அந்த கட்டிடத்தின் 13-வது மாடிக்கு சென்ற நந்தினி, அங்கிருந்து செல்போனில் செல்பி புகைப்படம் எடுக்க முயன்றார். கட்டிடத்தில் இன்னும் தடுப்புச்சுவர் கட்டப்படாத நிலையில், அவர் 13-வது மாடியின் விளிம்பில் நின்று செல்பி போட்டோ எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று 13-வது மாடியில் இருந்து நந்தினி கால் தவறி கீழே தரையில் விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதை பார்த்து அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்த கதறி துடிக்க, உடனே நந்தினியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரப்பன அக்ரஹாரா போலீசார் நந்தினி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நந்தினி செல்பி எடுக்க முயன்றபோது கட்டிடத்தில் இருந்து கால் தவறி விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. நந்தினி இதேப்போன்று பல இடங்களில் உயரமான கட்டிடங்களில் நின்று செல்பி எடுத்து இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே நந்தினியின் செல்போனில் இவர் எடுத்த கடைசி செல்பி போட்டோவை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
June 28, 2025 3:41 PM IST


