Last Updated:
அமெரிக்கா ஈரானின் 3 அணு சக்தி நிலையங்களை தாக்கியது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரம். டிரம்ப் உரையாற்ற உள்ளார். உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானில் உள்ள 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க வான்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தங்கள் நாடு மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் தான் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்திருந்தார்.
எனினும், ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலையில் ஈரானின் இஷ்பஹான் அணு உலை மீது இஸ்ரேல் அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில், அணு உலை சேதமடைந்ததாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், ஈரானின் முக்கியத் தளபதியான சயீத் இசாதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு ஈரான் மீது அமெரிக்க நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்படி ஈரானில் உள்ள 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க வான்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்திவிட்டு திரும்பியுள்ளது. ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய அணுசக்தி நிலையங்களை தாக்கியுள்ளது. யுரேனியம் செறிவூட்டுவதில் முக்கிய நிலையமான ஃபோர்டோவில் முழுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் காலை 7:30 மணிக்கு அமெரிக்க நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உரையாற்ற உள்ளார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவித்த நிலையில் உரையாற்றுகிறார். அதன்படி இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலில் இறங்கியுள்ளதால் உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
June 22, 2025 7:24 AM IST
இஸ்ரேல் – ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா… உலக அளவில் அதிகரித்த பதற்றம்!


