Last Updated:
ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளை வழி நடத்திய திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவருக்கு இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கீழ அம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சண்முகம், ஓய்வுபெற்ற செவிலியர் பக்கிரியம்மாள் இவர்களின் இளைய மகன் சதீஸ்குமார் தற்போது இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெங்களூரு பிரிவில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு இங்கிலாந்து அரசு 2025-2026ஆம் ஆண்டுக்கான செவனிங் ஸ்காலர் (UK Chevening Scholarship) என்ற உயரிய வாய்ப்பையும், அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது. செவனிங் உதவித்தொகை என்பது இங்கிலாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிதியுதவித் திட்டமாகும். இது சர்வதேச மாணவர்களுக்கு இங்கிலாந்தில் ஒரு வருட முதுகலைப் பட்டப்படிப்பைப் படிக்க உதவுகிறது.
இந்த உதவித்தொகை, கல்விக் கட்டணம், பயணச் செலவுகள், விசா கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கான மாதாந்திர செலவு ஆகியவற்றை உள்ளடக்கியது. செவனிங் உதவித்தொகை 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் இங்கிலாந்திலுள்ள லாபொறூக் யுனிவர்சிட்டி மூலம் ஓராண்டு காலத்திற்கு விளையாட்டு மேலாண்மை, அரசியல் மற்றும் சர்வதேச மேம்பாடு குறித்த முதுநிலைக் கல்வியைப் பயிலவுள்ளார். இந்திய அரசு எதிர்காலத்தில் ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போது, இவரது கல்வி மற்றும் பன்னாட்டு அனுபவம் இந்தியாவின் விளையாட்டுக் கொள்கை மற்றும் நிர்வாகத் துறைகளில் நிலையான உறுதித்தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இவர் ஏற்கனவே பிரான்சில் நடந்த ஒலிம்பிக் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளுக்கு கண்காணிப்பாளராகச் செயல்பட்டு பல்வேறு நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
June 26, 2025 6:48 PM IST

