ஈரானின் மலைகளில் இருக்கும் ஃபோர்டோ அணு உலை மீது ஆறு பங்கர் பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஃபோர்டோ அணு உலை, இஸ்ரேலின் ஏவுகணைகளுக்கு எட்டாத வகையில் மலைகளுக்கு இடையில் ஆழமாக அமைந்திருக்கிறது.
அமெரிக்கா பயன்படுத்திய 13,600 கிலோ எடை கொண்ட ‘பங்கர் பஸ்டர்’ குண்டு மட்டுமே ஃபோர்டோவைத் தாக்கும் திறன் கொண்டது.
இஸ்ரேலும் குறிப்பாக இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துமாறு அமெரிக்காவிடம் கோரியுள்ளது.
‘GBU-57’ என்றால் என்ன?
‘GBU-57’ என்றழைக்கப்படும் குண்டு, மற்ற ஏவுகணைகளைப் போல மேற்பரப்பில் வெடிப்பதில்லை. இது 6,000 பவுண்ட் வெடிபொருளைக் கொண்டது.
B-2 எனப்படும் ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டு வீச்சு விமானங்கள் மூலமாக ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
முக்கியமாக, இந்த வகையிலான விமானங்கள் மட்டுமே ‘GBU-57’ குண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இந்த விமானம் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 11,500 மைல்கள் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், “அற்புதமான ராணுவ வெற்றி. ஈரானின் அணு உலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன” எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. மோதல்கள் இன்னும் அதிகரிக்காமல் இருக்கவும் அது எச்சரித்துள்ளது.

