Last Updated:
முன்னாள் எம்.பி. அனந்தகுமார் ஹெக்டேவின் ஆதரவாளர்கள் சைஃப்பின் காரை முந்திச் சென்றதால், சைஃப்பை தாக்கியதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினராக இருந்தவர் அனந்தகுமார் ஹெக்டே. இவர் கடந்த திங்கட்கிழமை பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே தனது உதவியாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண்கள் உள்ளிட்ட பலருடன் டொயோட்டா இன்னோவா காரை சைஃப் என்பவர் அப்பகுதி வழியாக ஓட்டி வந்துள்ளார்.
இரண்டு வாகனங்களும் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அப்போது வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முயன்றன. ஒரு கட்டத்தில் சைஃப், அனந்தகுமார் ஹெக்டேவின் மஹிந்திரா XUV-700 காரை முந்திச் சென்றுள்ளார்.
வாகனங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி வந்ததால் சைஃப் காரில் இருந்த பெண்கள் பயத்தில் அலறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் எம்.பி.யின் டிரைவர் மகேஷ் SUV காரை வேகமாக ஓட்டிச் சென்று சைஃப்பின் வாகனத்தை முந்திச் சென்று தடுத்துள்ளார். மஹிந்திராவிலிருந்து இறங்கிய நபர்கள் சைஃப் உள்ளிட்டோரை இன்னோவாவிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு தாக்க ஆரம்பித்துள்ளனர்.
அதில் ஹெக்டேவின் உதவியாளர் ஸ்ரீதர் என்பவர் கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்ததால் பெண்கள் பயத்தில் சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டனர். அங்கிருந்தவர்கள் அருகில் வந்ததும், தாக்குதலை நிறுத்திவிட்டு ஹெக்டேவின் ஆட்கள் காரில் ஏறி செல்ல ஆரம்பித்தனர்.
இந்தக் காட்சிகளை எல்லாம் இன்னோவா காரிலிருந்த பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அதற்குள், பாதிக்கப்பட்டவரின் வாகனத்தில் இருந்த இரண்டு பெண்கள் ஹெக்டேவின் எஸ்யூவியைத் தடுத்தனர்.
இதற்கிடையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இரு வாகனங்களில் வந்தவர்களையும் டோப்ஸ்பெட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முன்னாள் எம்.பி.யின் உதவியாளர்கள் தாக்கியதில் சைஃபின் இரண்டு பற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவல்நிலையத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிறரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, முன்னாள் எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
June 25, 2025 9:36 PM IST


