Last Updated:
இதற்கிடையே ஈரானிடம் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் தலைவர்கள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்போது இரு நாடுகளுக்கு இடையே அணுசக்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் உற்பத்தி செய்யும் அணு ஆயுதங்களால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, இஸ்ரேல் நாடு ஈரான் மீது அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்படுகிறது.
இந்த சண்டையில் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது பற்றி இன்று கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்பது அவசியமான ஒன்றாகும் என்று கூறினார்.
இதற்கிடையே ஈரானிடம் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறி வருகிறது. இதன் மூலம் 10 அணு ஆயுதங்களை ஈரான் நாட்டினால் தயாரிக்க முடியும். தற்போது இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரான் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பத்திரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது எந்த இடம் என்று இதுவரை அமெரிக்க மற்றும் இஸ்ரேலால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதே போன்று அமெரிக்கா மற்றும் ஈரான், இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் அடுத்த வாரம் அமெரிக்க மற்றும் ஈரான் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அப்போது அணுசக்தி ஆயுதங்கள் குறித்து முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
June 25, 2025 10:23 PM IST
ஈரான் – அமெரிக்கா நாடுகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை.. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய முடிவு..


