Last Updated:
இந்தியாவுக்கும் மனிதத்திற்கும் ரிலையன்ஸ் 100 ஆண்டுகளை கடந்த பிறகும் சேவைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
தனது வாழ்க்கையில் தான் எடுத்த பெரிய ரிஸ்க் என்பது ஜியோவை அறிமுகம் செய்ததுதான் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு ஜியோ நிறுவனம் இந்தியாவின் முதன்மை டெலிகாம் துறையாக மாறியுள்ள நிலையில் முகேஷ் அம்பானி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முகேஷ் அம்பானி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகம் செய்தோம். என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்கான விஷயமாக இதனை நான் கருதுகிறேன்.
அந்த முடிவை எடுத்த போது என்னுடைய நிர்வாக குழுவிடம், இது சவாலான முடிவுதான். இதில் அதிக அளவு நாம் லாபம் எடுக்க முடியாது. இருந்தாலும் பரவாயில்லை, நம்முடைய சொந்த பணத்தைதான் இதில் செலவிடுகிறோம் என்று கூறினேன். இன்றைக்கு இந்தியா பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
இதில் ரிலையன்ஸின் பங்களிப்பை ஒரு சிறந்த செயலாக கருதுகிறேன். நாங்கள் எப்போதும் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கிறோம். அதனை நாங்கள் முக்கியத்துவமாகவும் கருதுகிறோம். இதனால் வரையில் நாங்கள் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் என்பது ஜியோதான்.
ஜியோ அறிமுகமான தருணத்தில் நாங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்திருந்தோம். ஜியோ முதலீட்டில் நாங்கள் தான் அதிகமான பங்குகளை வைத்திருந்தோம். அந்த சூழலில் இந்தியா இன்னும் மிகவும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் டெக்னாலஜியை எதிர்கொள்ள தயாராகவில்லை என்று ஆய்வாளர்கள் சொன்னார்கள். ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கை வைத்தோம்.
இன்றைக்கு உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் டெலிகாம் நிறுவனமாக ஜியோ மாறியிருக்கிறது. எல்லோருக்கும் குறைந்த விலையில் டேட்டாவை தருகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்களும் ஜியோவை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இ–காமர்ஸ், நிதித்துறை தொழில்நுட்பம், கல்வி தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்திலும் இன்றைக்கு ஜியோ முன்னணி நிறுவனமாக மாறியிருக்கிறது. 47 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு உள்ளார்கள். 2027 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கோல்டன் ஜூபிலி கொண்டாட உள்ளது.
நான் இந்தியாவுக்கும் மனிதத்திற்கும் ரிலையன்ஸ் 100 ஆண்டுகளை கடந்த பிறகும் சேவைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இது நடக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
June 25, 2025 5:39 PM IST


