இந்த நிகழ்வு தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ டெலிஸ்கோப்ஸ் மூலம் இந்த சிறிய, ஆனால் மிகவும் சக்திவாய்ந்த சிக்னல் ஜூன் 13 அன்று கண்டறியப்பட்டது. இது ரிலே திட்டத்தின் ஒரு பகுதியாக 1964ஆம் ஆண்டு நாசாவால் ஏவப்பட்ட ரிலே 2 (Relay 2) என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் இருந்து பெறப்பட்டிருக்கிறது. இந்த சிக்னல் 30 நானோ வினாடிகளுக்கும் குறைவாகவே நீடித்தது. ஆனால், முழு விண்மீன் திரள்களையும் விட பிரகாசமாக இருந்தது என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Relay 2 செயற்கைக்கோள் கடைசியாக 1965 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. மேலும் 1967 வாக்கில், இதன் அனைத்து அமைப்புகளும் செயல்படவில்லை என்று கருதப்பட்டது. அப்போதிலிருந்து சமீபத்தில் ரேடியோ சிக்னல் கிடைக்கும்வரை அது அமைதியாகவே இருந்தது. ரிலே 2 அதன் வேலையை சுமார் மூன்று ஆண்டுகள் மட்டுமே செய்து 1967-ல் அமைதியாகி விட்டதால் நாசா அதை செயலிழந்துவிட்ட செயற்கைக்கோளாக அறிவித்தது.
இது குறித்து பேசிய ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியற்பியல் நிபுணர் கிளான்சி ஜேம்ஸ், “நானும் எனது சகாக்களும் நமது கேலக்சியிலிருந்து திடீரென சிக்னல் வந்ததால் அதிர்ச்சியடைந்தோம். ஒருவேளை சிக்னல் அனுப்பிய பொருள் அருகில் இருந்தால், அதை ஆப்டிகல் டெலிஸ்கோப் மூலம் மிக எளிதாக ஆராய முடியும் என்பதால் நாங்கள் அனைவரும் உற்சாகமடைந்தோம். ஒருவேளை நாங்கள் ஒரு புதிய பல்சர் அல்லது வேறு ஏதாவது பொருளைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று நினைத்தோம்.”
“நாங்கள் பெற்ற சிக்னல் மிகக் குறுகிய காலத்திற்கு வானத்தில் உள்ள எல்லாவற்றையும் விடப் பிரகாசமாக இருந்த நம்பமுடியாத சக்திவாய்ந்த ரேடியோ பல்ஸ் ஆகும்” என்றார். “பின் தொடர்ந்து செய்த பகுப்பாய்வில், ஃபிளாஷ் உருவானது பூமியிலிருந்து 20,000 கி.மீ. தூரத்திற்குள் இருந்து சிக்னல் வந்தது கண்டறியப்பட்டது. பின் ஏற்கனவே அறியப்பட்ட செயற்கைக்கோள்களின் இருப்பிடங்களுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்தபிறகு, பெறப்பட்ட பல்ஸ் ரிலே 2 செயற்கைக்கோளிலிருந்து வந்தது என்பதை இறுதியாக கண்டறிந்தோம்” என்றார்.
செயற்கைக்கோள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக செயலிழந்துவிட்ட நிலையில் பூமிக்கு கிடைத்த சிக்னல் செயற்கைக்கோளின் அமைப்புகள் திடீரென இயங்கியதால் ஏற்பட்டிருக்காது; நிச்சயம் ஏதேனும் ஒரு வெளிப்புற காரணியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உதாரணமாக, ஒரு எலெக்ட்ரோஸ்டேட்டிக் டிஸ்சார்ஜ் (electrostatic discharge) அல்லது ஒரு மைக்ரோ விண்கல் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் கரேன் அப்லின், “இந்த சிக்னல் கண்டுபிடிப்பு விண்வெளியில் electrostatic discharge தொடர்பான ஆய்விற்கு ஒரு புதிய வழியை வழங்கக்கூடும் என்றும், மேலும் சிறிய செயற்கைக்கோள்கள் ஏவப்படும்போது இது பெருகிய முறையில் பயனுள்ளதாக மாறும்” என்றும் குறிப்பிட்டார்.
விண்வெளி குப்பைகள் அதிகமாகவும், எலெக்ட்ரோஸ்டேட்டிக் டிஸ்சார்ஜ் (ESD) வரையறுக்கப்பட்ட பாதுகாப்புடன் கூடிய சிறிய, குறைந்த விலை செயற்கைக்கோள்கள் அதிகமாகவும் இருக்கும் உலகில், இந்த ரேடியோ சிக்னல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விண்வெளியில் எலெக்ட்ரோஸ்டேட்டிக் டிஸ்சார்ஜை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய நுட்பத்தை வழங்கக்கூடும் என்றார். இந்தக் கண்டுபிடிப்புகள் தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
June 25, 2025 4:41 PM IST
செயலிழந்ததாக அறிவித்த செயற்கைக்கோள்…! 60 ஆண்டுகளுக்கு பின் சிக்னல் அனுப்பியதன் மர்மம் என்ன…?

