கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவின் காபி ஏற்றுமதி இருமடங்குக்கும் அதிகமாக வளர்ந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டியுள்ளது. 2014–15ஆம் ஆண்டில் 800 மில்லியன் டாலர்களாக இருந்த இந்த எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து, இந்தியாவை உலகின் ஐந்தாவது மிகப்பெரிய காபி ஏற்றுமதியாளராக மாற்றியுள்ளது. இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, பெல்ஜியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்திய காபி ஏற்றுமதியின் முக்கிய நாடுகளாக உள்ளன.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
உலகின் ஏழாவது பெரிய காபி உற்பத்தியாளரான இந்தியா, ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு காபியை உற்பத்தி செய்கிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வறுக்கப்படாத அராபிகா மற்றும் ரோபஸ்டா பீன்கள் இந்தியாவின் ஏற்றுமதியில் முதன்மையாக உள்ளன. இவை தனித்துவமான மணமும், சுவையும் கொண்டதால், உலகளாவிய சந்தைகளில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
காபி உற்பத்தி செய்யும் மாநிலங்கள்:
கர்நாடகா: காபி உற்பத்தி செய்யும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகும். 2022–23ஆம் ஆண்டில் 2.48 லட்சம் மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்து, நாட்டின் மொத்த உற்பத்தியில் பெரும் பங்காற்றியது.
கேரளா: காபி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஈரமான காலநிலை மற்றும் சூழல் அதன் சூழ்நிலைகள், தரமான காபி பீன்ஸ் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
தமிழ்நாடு: குறிப்பாக நீலகிரி மாவட்டம், காபி சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் காபி தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளது.
இவ்வாறாக, இந்த மூன்று மாநிலங்களும் நாட்டின் காபி உற்பத்தியை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய சக்திகளாக இருந்து வருகின்றன. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பயிரிடப்படும் இந்த காபி, பல்லுயிர் பெருக்கத்திற்கும், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் முக்கிய பங்களிப்பாக இருக்கிறது.
வளர்ச்சிப் பாதையில் உள்நாட்டு நுகர்வு:
கஃபே கலாச்சாரம், நகர்ப்புற வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் உயர்ந்த நுகர்வு வருமானம் ஆகியவை, இந்தியாவில் காபி மீது உள்ள விருப்பத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.
- 2012-இல் உள்நாட்டு நுகர்வு: 84,000 டன்
- 2023-இல் இது 91,000 டன்னாக உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சி நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான தேவை:
வறுத்த காபி மற்றும் இன்ஸ்டன்ட் காபி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து வருகிறது. இது சர்வதேச சந்தைகளில் புதிய விருப்பங்களை உருவாக்குவதோடு, இந்திய காபி ஏற்றுமதிக்கு முன்னேற்றத்தை அளித்துள்ளது. இவை அடுத்த கட்ட ஏற்றுமதிக்கான வாய்ப்புகளாகவும் பார்க்கப்படுகின்றன.
அரசின் வளர்ச்சி நடவடிக்கைகள்:
இந்தியாவின் காபி துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்திய காபி வாரியம் பல்வேறு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஒருங்கிணைந்த காபி மேம்பாட்டுத் திட்டம் (ICDP) மூலம் கீழ்க்கண்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.
- உயர் விளைச்சல் தரும் தொழில்நுட்பங்கள்
- பாரம்பரியமற்ற பகுதிகளில் சாகுபடி விரிவாக்கம்
- நிலைத்த விவசாய நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இந்த உத்திகள், இந்தியாவின் காபி உற்பத்தியை அளவிலும், தரத்திலும் மேம்படுத்துவதுடன், உலக சந்தையில் போட்டியை அதிகரிக்கவும், வேளாண் உற்பத்தியாளர்களுக்கு சீரான வருமானத்தையும் உறுதி செய்கின்றன. இந்த வளர்ச்சி இந்தியாவின் காபி தொழிலுக்கு புதிய பரிமாணங்களை உருவாக்கியுள்ளது. வரும் காலத்தில், இந்திய காபி, அதன் தரம், சுவை மற்றும் நிலைத்த முறைகளால் உலக சந்தையில் மேலும் தனிச்சிறப்புடன் வலம் வரக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
June 25, 2025 1:05 PM IST
உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியா… கடந்த 11 ஆண்டுகளில் காபி ஏற்றுமதி இருமடங்காக உயர்வு…!

