Last Updated:
மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கியதாக விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியிடம் வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ராகுல் காந்தி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸின் சொந்த தொகுதியில் கடந்த 5 மாதங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, பல்வேறு வாக்குச் சாவடிகளில் 20 முதல் 50 விழுக்காடு வரை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், யாரென்றே தெரியாத பலர் வாக்களித்தாக வாக்குச்சாவடி அதிகாரிகள் குற்றம்சாட்டியதாகவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
இது ஒருங்கிணைந்த குற்றம் என்று கூறிய ராகுல் காந்தி, வாக்குகள் திருடப்பட்டு இருப்பதாகச் சாடினார். இதனால் தான், ஆன்லைன் வாக்காளர் பட்டியல் மற்றும் சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராகுல் காந்தி பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்பே அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டதாக கூறியுள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 89 முறையீடுகள் மட்டுமே வந்ததாகவும், அதற்கு தீர்வு காணப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பாக விவாதத்திற்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளது.
June 24, 2025 6:15 PM IST


