Last Updated:
பயணிகள் மற்றும் ஊழியர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 5 பயணிகள் உட்பட 7 பேருக்கு வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து கடந்த திங்கட்கிழமை மும்பை வந்த ஏஐ 130 என்ற விமானத்தில் பயணிகள் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குறிப்பாக, 5 பயணிகள், விமான ஊழியர்கள் 6 பேருக்கு விமானத்திலேயே வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், மும்பையில் விமானம் தரையிறங்கியதும் 5 பயணிகள் உட்பட 7 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், அவ்வாறு நேர்ந்திருந்தால் ஆக்சிஜன் மாஸ்க் தானாகவே பயன்பாட்டிற்கு வந்திருக்கும் என ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆக்சிஜன் மாஸ்க் தானாக பயன்பாட்டிற்கு வராத நிலையில், விமானத்தில் உணவு நஞ்சாக மாறி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள மருத்துவர்கள் பயணிகள் மற்றும் ஊழியர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதே சமயம், பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு தான், விமானிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், அவர்கள் நலமுடன் இருந்ததாகவும் ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. அகமதாபாத் விமான விபத்தின் அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள், ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
June 24, 2025 6:25 PM IST


