Last Updated:
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா அறிவித்த நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இஸ்ரேலும், ஈரானும் போரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதற்கு பதிலளித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவான சூழலில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் இந்த செயலுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தன.
இதையடுத்து, கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா, யூஏஇ உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆறு மணி நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றும் 12 மணி நேரத்தில் ஈரான் தாக்குதலை நிறுத்தும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் என்றும் 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் போர் பல ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய கிழக்குப் பகுதி முழுமையாக அழியும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் ஆனால், அது நடக்கவில்லை என்றும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வரவில்லை என்றும், இஸ்ரேல் தான் போரை தொடங்கியதாகவும், அவர்கள் தான் போரை நிறுத்த வேண்டும் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், ஈரான் தாக்குதல் நடத்தாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். மேலும் போர் நிறுத்தம் குறித்து ஈரான் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
June 24, 2025 7:04 AM IST


