அட்மிரல்டி சாலையில் கடந்த ஜூன் 20 அன்று நடந்த பல்வேறு வாகனங்கள் தொடர்புடைய விபத்தில் 30 வயதுமிக்க ஆடவர் உயிரி ழந்தார்.
அவருக்கு ஐந்து வயதில் பெண் பிள்ளை இருப்பதாகவும், தாய் இல்லாமல் தனியாகவே தன் பிள்ளையை கவனித்து பராமரித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல், ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்கு அவர் தினமும் பயணம் செய்வார் என்றும், தனது ஐந்து வயது மகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக இரண்டு வேலைகளை அவர் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அன்று மதியம், சான் யோங் காங் ஜோகூர் பாருவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, அட்மிரல்டி சாலையில் மற்றொரு மோட்டார் சைக்கிள், டிரக் மற்றும் லாரியுடன் விபத்தில் சிக்கினார்.
அதில் சான் லாரியில் மோதியதாகவும், அதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் அவ்வழியாக வந்து கொண்டிருந்த குப்பை லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி நசுங்கியதாகவும் அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்து தகவல் கொடுக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்கு வருவார்
மலேசியரான சான் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியனாக தனது வேலை செய்யத் தொடங்கினார்.
சானின் பேஸ்புக் சுயவிவரப் பதிவுகளின்படி, தாய் இல்லாமல் அவர் மட்டும் பிள்ளையை கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக ஷின் மின் செய்தி தெரிவித்துள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சானின் மனைவி அவரையும் தன் மகளையும் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதாவது 2024ல் இருவருக்கும் இடையே விவாகரத்து நடவடிக்கைகள் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
சான் பெற்றோருக்கு பிறந்த எட்டு பேரில் இவர் மூன்றாவதாக பிறந்தவர் என்றும், இவர் தான் மூத்த ஆண் மகன் என்றும் சானின் மூத்த சகோதரி ஷின் மினிடம் கூறினார்.
சானும் மற்றொரு சகோதரரும் சிங்கப்பூரில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், இதனால் தினமும் எல்லையைத் தாண்டி பயணம் செய்வர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சான் தினமும் அதிகாலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுவார் என்றும் அவரின் சகோதரி கூறியுள்ளார்.
சான் கடுமையாக உழைக்கக்கூடியவர் மேலும் எளிமையான மனிதர் என்றும், அவர் தனது வயதான பெற்றோர் உட்பட குடும்பத்தை பாதுகாத்து வந்ததாகவும் சானின் சகோதரி கூறினார்.
சிங்கப்பூரில் பிற்பகல் 3 மணிக்கு வேலை முடிந்ததும், சான் ஜோகூர் பாருவுக்கு மீண்டும் திரும்புவார், பின்னர் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக இரவு 7 மணி வரை அங்கு உணவு விநியோக வேலைகளை செய்வார்.
தன்னுடைய மகளுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை வழங்க வேண்டும் என்பதற்காகவும், விவாகரத்து தொடர்பான நிதிக்காகவும் 2 வேலைகளை செய்து வந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சான் ஒவ்வொரு வார இறுதியில் தனது மகளுடன் நேரத்தை செலவிடுவார் என்றும் சானின் சகோதரி நினைவு கூர்ந்தார்.
“பிள்ளைக்கு ஐந்து வயதுதான் ஆகுது, இன்னும் மரணம் என்றால் என்ன என்பதை கூட அவளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் தன் தந்தையின் சடலத்தைக் கண்டதும், அவள் கதறி அழுவதை எங்களால் தாங்க முடியவில்லை,” என்று சானின் சகோதரி ஷின் மின்னிடம் கூறினார்.

