Last Updated:
இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் 14-ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அந்நிய மண்ணில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற கபில்தேவின் சாதனையை பும்ரா சமன் செய்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடர் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பன்ட் 134 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியபோது, இந்திய வீரர்களின் அசத்தலான பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை நழுவவிட்டார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் 14-ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அயல்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 12-ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. இதன்மூலம் அதிக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற கபில்தேவின் சாதனையை சமன் செய்துள்ளார் பumரா. அதுமட்டுமன்றி, இங்கிலாந்தில் அதிக 5 விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்னர் 10 இந்திய வீரர்கள் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். களத்தில் நிற்கும் கே.எல்.ராகுலும், கேப்டன் ஷுப்மன் கில்லும் இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டுசெல்வர் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
June 23, 2025 7:35 AM IST


