நேற்று வரை, இஸ்ரேல் – ஈரான் தாக்குதலாக இருந்தது, இன்று முதல் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் தாக்குதலாக மாறியுள்ளது.
ஈரானின் மூன்று அணு ஆயுத திட்டப் பகுதிகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனங்களைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
“இஸ்ரேலின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அணு சக்தி மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனங்களைத் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தாக்குதலால், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறுவதாகும். ஐ.நா சாசனத்தின் கீழ், தங்களைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்குச் சட்டப்பூர்வமான உரிமை உள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஈரானுக்கு எதிராக எழுந்து வரும் பதற்றம் மற்றும் வன்முறை மிகவும் கவலையளிக்கிறது. இது அந்தப் பிராந்தியத்தையும், அதற்கு அப்பால் உள்ள இடங்களையும் பாதிக்கும்.

