Last Updated:
ஏர் இந்தியா விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து, 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 241 பயணிகள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து நடப்பதற்கான காரணம் குறித்து 3 மாதங்களுக்குள் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்பி, அதன் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏர் இந்தியாவின் வருகை பதிவேடு, பணிப்பதிவேடு, செயல்பாட்டு அறிக்கை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ததில் அதில் பல விதி மீறல்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அந்த அறிக்கையை 10 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் 16, 17 தேதிகளில் பெங்களூருவில் இருந்து லண்டனுக்கு இயக்கப்பட்ட இரண்டு விமானங்களில் விமானிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் விமானத்தை இயக்க வைக்கப்பட்டிருப்பதாக டிஜிசிஏ குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாகவும் விளக்கம் கேட்டு ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அபராதம், உரிமம் ரத்து ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், விமான இயக்கத்திற்கான அனுமதியே ரத்து செய்யப்படும் என்றும் டிஜிசிஏ எச்சரித்துள்ளது.
Ahmedabad,Gujarat
June 22, 2025 8:27 AM IST


