கிள்ளான்:
இங்குள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் குழு நடத்திய பகடிவதை சம்பவம் தொடர்பான வீடியோப் பதிவு சனிக்கிழமை சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அதுதொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு மதியம் 12.53 மணிக்கு புகார் கிடைத்ததாக வட கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் கூறினார்.
“ஃபேஸ்புக் பயனர் ஒருவரால் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் குழு சம்பந்தப்பட்ட பள்ளி கழிப்பறையில் ஒரு மாணவியை கொடுமைப்படுத்தியதை கண்டறிந்ததாக அவர் நேற்று சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த காணொலியில் பாதிக்கப்பட்ட மாணவியை 8 பேர் கொண்ட சக மாணவிகள் கன்னத்திலும் முதுகிலும் தாக்குவதைக் காணமுடிகிறது.
வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும்
கூறினார்.
“குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே எந்தவொரு கொடுமைப்படுத்துதலோ அல்லது பகடிவதையையோ காவல்துறை தீவிரமாகக் கருதுகிறது என்று அவர் சொன்னார்.




