Last Updated:
யாா் வெற்றி பெற வேண்டும் என ஏற்கெனவே முடிவை தீா்மானித்து நடத்தப்படும் தோ்தல் மக்களாட்சிக்கே விஷம் என ராகுல் காந்தி சாடியிருந்தார்.
வாக்குப்பதிவின் போது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது, வாக்காளரின் தனியுரிமைக்கு எதிரானது என்று இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலின் போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் வழிமுறை குறித்து தலைமை தேர்தல் ஆணையம், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.
அதில், வாக்குப்பதிவு குறித்த சிசிடிவி மற்றும் புகைப்படங்களை 45 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவை எதிர்த்து 45 நாட்களுக்குள் யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடராவிட்டால், அவற்றை அழிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். தோ்தல் ஆணையமே ஆதாரங்களை அழிப்பதாகவும், யாா் வெற்றி பெற வேண்டும் என ஏற்கெனவே முடிவை தீா்மானித்து நடத்தப்படும் தோ்தல் மக்களாட்சிக்கே விஷம் எனவும் சாடினார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குச் சாவடிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது வாக்காளர்களை ஆபத்தில் தள்ளக்கூடும் என தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பது தெரிந்துவிடும் என்றும் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும், வாக்காளர்களின் தனியுரிமையும் பாதுகாப்பும் மிக மிக முக்கியமானது என்றும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், நீதிமன்ற உத்தரவை தவிர, வேறு எந்த சூழலிலும் பொதுவெளியில் தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்படாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
June 22, 2025 8:50 AM IST
“தோ்தல் ஆணையமே ஆதாரங்களை அழிக்கிறது…” – ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் பதில்


