இஸ்ரேல் – ஈரான் இடையே நடக்கும் தாக்குதல்கள் ஒரு வாரத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இந்தத் தாக்குதலினால் மூன்றாம் உலகப் போர் அச்சம், கச்சா எண்ணெய் விலைவாசி உயர்வு, செங்கடல் மற்றும் ஹார்முஸ் பாதையில் நடக்கும் வணிக பாதிப்புகள் எனப் பல அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து உலகில் உள்ள சில நாடுகள் இந்தத் தாக்குதலில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. அவை என்ன என்று பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்குச் சாதகமாகத்தான் மறைமுகமாகப் பேசி வருகிறார். ஈரானை மிரட்டி வருகிறார். இந்த மறைமுக ஆதரவு, சமீப நாள்களில் ஓப்பனாகவே மாறியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானைத் தாக்கும் இஸ்ரேலின் தாக்குதலில், “தான் இணையலாம்… இணையாமலும் போகலாம்’ என்று கூறியிருந்தார்.
இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி , “வாஷிங்டன் இந்த மாதிரியான நிலைப்பாட்டைப் பரிந்துரைப்பதைக் கூட நாங்கள் எச்சரிக்கிறோம். இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்” என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ரஷ்ய (ஜூன் 19) அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தொலைப்பேசியில் பேசியுள்ளனர்.
அப்போது ஜின்பிங், “இரு நாடுகளுக்கு இடையே சீக்கிரம் தாக்குதல் நிறுத்தம் நடைபெற வேண்டும். ஈரானை இஸ்ரேல் தாக்குவது சர்வதேச சட்ட மீறல்.
அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் நிலைமையைப் பெரிதாக்க முயலாமல், சரிப்படுத்த முயல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

