Last Updated:
ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரரின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் அவருக்கு நாராயணபலி உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகள் நடத்தப்பட்டன.
ரஷ்யா – உக்ரைன் போரில் வீரமரணம் அடைந்த ரஷ்ய ராணுவ வீரர் செர்ஜி கிராப்லெவின் இறுதி சடங்குகள் கர்நாடக மாநிலம் கோகர்ணாவில் உள்ள ஸ்ரீ மஹாபலேஷ்வரா கோயிலில் இந்து முறைப்படி நடைபெற்றது. நீண்ட கால இந்து பக்தரான கிராப்லெவ், கடந்த 18 ஆண்டுகளாக கோகர்ணாவுக்கு தவறாமல் சென்று, வாரணாசியில் ஆன்மிக தீட்சை பெற்றார். இந்நிலையில் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்த அவர், ஏப்ரல் 28 அன்று போரில் வீர மரணமடைந்தார்.
கிராப்லெவின் குடும்பத்தினர் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாததால், மதகுரு வி. பிரஷாந்த் ஹிரேகங்கேயின் வழிகாட்டுதலின் கீழ் தகனம் செய்யப்பட்டது. ரஷ்யாவில் உள்ள செர்ஜி கிராப்லெவின் குடும்பத்தினர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த செயலைப் பார்த்தனர். “செர்ஜியின் ஆன்மா காப்பாற்றப்படட்டும்” என்று அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
அவரது ஆன்மா சாந்தி அடையும் வகையில் அவருக்கு நாராயணபலி உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகள் நடத்தப்பட்டன. இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களின் ஆன்மா பித்ருலோகத்தை அடையவும் இந்த சடங்கு செய்யப்படுகிறது. அதில், நெய் மற்றும் கருப்பு எள் கலந்த சமைத்த அரிசி உருண்டைகளை வழங்கும் பிண்ட தானம் ஆகியவை இந்து முறைப்படி நடைபெற்றன.
செர்ஜி கிராப்லெவைப் பொறுத்தவரை, கோகர்ணா ஒரு மத ஸ்தலமாக மட்டுமல்லாமல், ஆன்மிக ஸ்தலமாகவும் இருந்தது. இங்குள்ள புனிதமான சூழலையும், கலாச்சாரத்தையும் தன் இதயத்தில் வைத்திருந்தார். கோகர்ணத்தை நேசித்த கிராப்லெவ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொண்டார். இந்து மதத்தில் ஈர்க்கப்பட்ட செர்ஜி, வாரணாசியில் சமஸ்கிருதம் பயின்றார் மற்றும் வேத மந்திரங்களை கற்றுக்கொண்டார். இங்குள்ள மக்கள் அவரை “செர்ஜி பாபா” என்று அழைப்பார்கள்.
செர்ஜி கிராப்லெவ் 18 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய ராணுவத்தை விட்டு வெளியேறினார். 2022இல், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய உடனேயே, அவர் தனது தாயகத்தின் அழைப்பின்பேரில் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, ஏப்ரல் 28ஆம் தேதி அன்று போரில் வீர மரணம் அடைந்தார். கோகர்ணாவில் உள்ள ஸ்ரீ மஹாபலேஷ்வரா கோயில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்தைச் சேர்ந்த மயூர் சர்மாவால் கட்டப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகும்.
கர்நாடகாவின் ஏழு முக்தி க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஸ்ரீ மஹாபலேஷ்வரா கோயில் முக்தி ஸ்தலமாகவும், முக்தி தரும் புனிதத் தலமாகவும் கருதப்படுகிறது. இந்த கோயிலானது கர்நாடகாவில் கார்வார் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஒரு முக்கியமான ஆன்மிக தலமாகவும், மற்றும் சுற்றுலா தலமாகவும் உள்ளது.
June 21, 2025 10:14 AM IST


