Last Updated:
நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சதம் அடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
113 ஓவர்கள் வரை விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 471 ரன்கள் எடுத்துள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று கூடுதலாக 112 ரன்கள் சேர்த்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று லீசில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். 78 பந்துகளை எதிர்கொண்ட கே.எல். ராகுல் 8 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து வெளியேறினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 159 பந்துகளில் 16 பவுண்டரி ஒரு சிக்சருடன் சதம் அடித்து 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தமிழக வீரர் சாய் சுதர்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்து இணைந்த கேப்டன் சுப்பன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது.
சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பந்த் 134 ரன்களும் எடுத்தனர். 113 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 471 ரன்கள் எடுத்துள்ளது.
430 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி கூடுதலாக 41 ரன்கள் சேர்த்தபோது மீதம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ப்ரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்திய அணியில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுகின்றனர். ரவிந்திர ஜடேஜா சுழலில் மிரட்டுவார் என்பதால் இந்திய அணியின் பவுலிங்கை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.
June 21, 2025 6:46 PM IST


