Last Updated:
2026 தேர்தலை கருத்தில் கொண்டு தொகுதி மறுசீரமைப்பைப் பிரச்சினையை திமுக கையில் எடுத்ததாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.
2026 தேர்தலை கருத்தில் கொண்டே தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், மத்திய அரசின் அறிவிக்கையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து குறிப்பிடப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்து பதிலளித்தார்.
அதாவது, மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், இதுகுறித்து பிரதமரே கூறியிருப்பதாகவும், 3 முறை செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் பங்கு குறையாது எனக் கூறிய அமித் ஷா, 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தப் பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, ஹரியானா போல் பாஜக-வுக்கு பிகார், மேற்கு வங்கம், கேரளாவில் வெற்றி கிட்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிகார், மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும் என்றும் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆங்கில மொழி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவின் ஆட்சேபனை குறித்த கேள்விக்கு, சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் பிரச்சினை பெரிதாக்கப்படுவதாக தெரிவித்த அமித் ஷா, மொழி விவகாரத்தில் மக்கள் தெளிவான சிந்தனையுடன் இருப்பதாக கூறினார்.
தென் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்வது இல்லை என்ற கேள்விக்கு, 2004 முதல் 2014 வரை 18 லட்சம் கோடி ரூபாய் நிதியாக ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியில் 70 லட்சம் கோடி வழங்கியதாக அமித் ஷா கூறினார்.
June 21, 2025 2:25 PM IST


