Last Updated:
இஸ்ரேல், ஈரானின் முக்கியத் தளபதி சயீத் இசாதியை கொன்றதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. ஜெனிவா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை பிடித்துச் செல்வதில் மூளையாக செயல்பட்டவரும், ஈரானின் முக்கியத் தளபதியுமான சயீத் இசாதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, ஜெனிவாவில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தங்கள் நாடு மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் தான் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலையில் ஈரானின் இஷ்பஹான் அணு உலை மீது இஸ்ரேல் அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில், அணு உலை சேதமடைந்ததாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், ஈரானின் முக்கியத் தளபதியான சயீத் இசாதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் குவாம் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சயீத் இசாதி உயிரிழந்திருப்பதாகவும், கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இவர் இருந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பிற்கு நிதி உதவி திரட்டும் பணியில் ஈடுபட்டதாகவும், ஈரானுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
June 21, 2025 3:49 PM IST


