Last Updated:
வேண்டுமென்றே தான் அதனை செய்யவில்லை என்பதை கில் நிரூபித்தால் இந்த தண்டனை தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஐசிசி விதிகளை மீறியுள்ளார். இதனால் அவருக்கு தண்டனை வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரராக விளையாடிய கே.எல். ராகுல் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் 127 ரன்கள் குவித்துள்ளார். ரிஷப் பந்த் 65 ரன்கள் சேர்க்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.
வலுவான நிலையில் இந்திய அணி உள்ள சூழலில், நேற்றைய ஆட்டத்தின் போது ஐசிசி விதிகளை மீறியதாக கேப்டன் சுப்மன் கில் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடைகளுக்கான ஐசிசி விதிகளின்படி வெள்ளை அல்லது கிரீம் அல்லது லேசான சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்களில் மட்டுமே சாக்ஸ் அணிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கருப்பு நிற சாக்ஸ் சுப்மன் கில் அணிந்து விளையாடினார். இது ஐசிசி விதிகளை மீறிய செயல் என்பதால், அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து இருந்து 20% வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் வேண்டுமென்றே தான் அதனை செய்யவில்லை என்பதை கில் நிரூபித்தால் இந்த தண்டனை தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
June 21, 2025 3:33 PM IST


