சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் நங்கூரமிட்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.10 மணிக்குத் தீச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
பிரானி, வெஸ்ட் கோஸ்ட் கடல்துறை தீயணைப்பு நிலையங்களிலிருந்து மூன்று மீட்புக் கப்பல்களும் கடல்துறைத் தீயணைப்பு வல்லுநர்கள் 40 பேரும் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அது கூறியது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றபோது கப்பலில் பொருள்களைச் சேமித்துவைக்கும் அறையிலிருந்து கரும்புகை எழுவதைக் காணமுடிந்ததாக குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
மீட்புக் கப்பலிலிருந்து தீப்பிடித்த எண்ணெய்க் கப்பலின் வெளிப்புறத்தைக் குளிர்விக்கும் வகையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதேநேரத்தில் மற்றொரு தீயணைப்பாளர் குழு, எண்ணெய்க் கப்பலுக்குள் சென்று, எரிந்துகொண்டிருந்த இடத்தை அடையாளம் கண்டு, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்ததாகக் கூறப்பட்டது.
எண்ணெய்க் கப்பலின் சிப்பந்திகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மேல்விவரங்களுக்குச் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தை அணுகியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.




