Last Updated:
“எங்களைத் தாக்க நினைக்கும் கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், சோரோகா மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனையில் சுமார் ஆயிரம் படுக்கைகள் இருந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர். இந்த தாக்குதலில், 60 வயது முதியவர் உட்பட பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈரானின் உள்ள கெர்மான்ஷா மாகாணத்தில் AH-1 ஹெலிகாப்டர் மீது இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது. இதே போன்று கிரேட்டர் தெஹ்ரான் பகுதியில் 40 இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை தயாரிப்பு மற்றும் கண்காணிப்பு பகுதிகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. மேலும், ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள ஏவுதளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தனது எக்ஸ் பக்கத்தில், “கோழைத்தனமான ஈரானிய சர்வாதிகாரி, ஒரு பலப்படுத்தப்பட்ட பதுங்கு குழியின் ஆழத்தில் அமர்ந்து இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணைகளை வீசுகிறார். இவை மிகவும் கடுமையான போர்க்குற்றங்கள். மேலும் கமேனி தனது குற்றங்களுக்கு பொறுப்பேற்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இஸ்ரேலுக்கான அச்சுறுத்தல்களை நீக்கவும், அயதுல்லா கமேனியின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஈரானில் உள்ள மூலோபாய இலக்குகள் மற்றும் தெஹ்ரானில் உள்ள அரசாங்க இலக்குகள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்க பிரதமரும் நானும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், டெல் அவிவ்-ல் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக கமேனி வெளிப்படையாக அறிவிக்கிறார். மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த அவரே உத்தரவிடுகிறார். இஸ்ரேல் அரசின் அழிவை ஒரு இலக்காக அவர் கருதுகிறார். ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கு தலைமை தாங்கி, இஸ்ரேலை அழிப்பதை தனது பணியாகக் கொண்ட கமேனி போன்ற ஒரு சர்வாதிகாரி தொடர்ந்து இருக்க முடியாது.
எங்களைத் தாக்க நினைக்கும் இந்த நபர் உயிருடன் இருக்கவே கூடாது. இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். இந்த நபரை அழிப்பது என்பது எங்களுடைய இந்தப் போரின் இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
June 19, 2025 6:26 PM IST
ஈரான் உயர் தலைவர் கமேனி உயிருடனே இருக்கக் கூடாது – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு


