ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் இறுதியில் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
இதனால் இரு நாடுகளுக்கிடையே மோதல் அதிகரித்தது. பின்னர், இருநாடுகளும் மோதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
ஆனால், வர்த்தகத்தை முன்வைத்து இந்த மோதலை நான்தான் முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறிவந்தார். இருப்பினும், ட்ரம்ப்பின் இத்தகைய கூற்றை மத்திய அரசு மறுத்துவந்தது.

நேற்று முன்தினம்கூட, கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டிலிருந்து ட்ரம்ப் முன்கூட்டியே கிளம்பியதால், பிரதமர் மோடியும் அவரும் சந்திக்க முடியாமல் போனது.
அதன்பிறகு ட்ரம்பிடம் செல்போனில் பேசிய மோடி “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை” என்று அவரிடமே கூறியதாகச் செய்தியாளர்களிடம் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

