இந்தப் புதிய கிளப் உலகக் கோப்பை ஏன் உருவாக்கப்பட்டது?
அதிக வருவாயை ஈட்டும் நோக்கத்தோடு 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 32 அணிகளைக் கொண்ட விரிவாக்கப்பட்ட கிளப் உலகக் கோப்பைக்கான திட்டங்களை அறிவித்த FIFA தலைவர் கியானி இன்பான்டினோ, “இது உலகக் கோப்பை போல இருக்கும்” என்றார். இதுவரை, கான்டினென்டல் கிளப் சாம்பியன்ஷிப்பின் ஆறு வெற்றியாளர்களும், கோப்பையை நடத்தும் அமெரிக்காவிலிருந்து ஒரு கிளப்பும் மட்டுமே தங்களது பெயர்களைச் சேர்த்துள்ளன. இந்த புதிய கிளப் உலகக் கோப்பை 2025-ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் நடத்தப்பட உள்ளது. இடைப்பட்ட ஆண்டுகளில், பழைய கிளப் உலகக் கோப்பை வடிவமைப்பைப் பின்பற்றி ஃபிஃபா இன்டர்கான்டினென்டல் கோப்பை நடத்தப்படும். அதுமட்டுமின்றி, 2026-ம் ஆண்டில் மகளிர் கிளப் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தவும் ஃபிஃபா திட்டமிட்டுள்ளது.
போட்டிக்கான அணிகள் நான்கு கிளப்களைக் கொண்ட எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு தகுதி பெறும். அதன் பிறகு, இறுதிப் போட்டி வரை அத்தனை ஆட்டங்களும் நாக் அவுட் வடிவத்தில் நடைபெறும். உலகக் கோப்பையைப் போல் இதில் மூன்றாம் இடத்திற்கான போட்டி இருக்காது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் 12 மைதானங்களில் நடைபெறவுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பசிபிக் கடற்கரையில் உள்ள சியாட்டில் உட்பட, அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் போட்டிகள் நடைபெறும். ஜூன் 14ஆம் தேதி மியாமியில் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக்கின் வெற்றியாளரான எகிப்தின் அல் அஹ்லி எஃப்சிக்கும், மெஸ்ஸி தற்போது விளையாடும் எம்எல்எஸ் கிளப்பான இன்டர் மியாமிக்கும் இடையிலான குரூப் ஏ-வின் முதல் போட்டியுடன் இந்த கிளப் உலகக் கோப்பை தொடங்குகிறது. இறுதிப் போட்டி ஜூலை 13-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும்.
கிளப் உலகக் கோப்பையில் எந்த அணிகள் எல்லாம் போட்டியிடுகின்றன?
சாம்பியன்ஸ் லீக்கின் கடைசி நான்கு வெற்றியாளர்களும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பாவில் தரவரிசையில் சிறந்த எட்டு அணிகளும் என ஐரோப்பா கண்டத்தில் மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பேயர்ன் மியூனிக் மற்றும் போருசியா டார்ட்மண்ட் ஜெர்மனியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தென் அமெரிக்காவில் ஆறு அணிகளும், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன. அதேபோல், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி அணிகளும் (CONCACAF) உள்ளன. நியூசிலாந்தின் ஆக்லாந்து சிட்டி எஃப்சி ஓசியானியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பரிசுத் தொகை எவ்வளவு?
இந்த ஆண்டு கிளப் உலகக் கோப்பை மூலம் $2 பில்லியன் (€1.75 பில்லியன்) வருவாய் ஈட்டும் என்று FIFA கணித்துள்ளது. இதில் பங்கேற்கும் கிளப்புகளுக்கு $1 பில்லியன் பரிசுத் தொகை செல்லும். இதற்கிடையில், வருடம் முழுவதும் பல கால்பந்து போட்டிகள் நடைபெறுவதால், புதிதாக இந்த நான்கு வார போட்டி வீரர்கள் ஓய்வெடுக்கவும் குணமடையவும் குறைவான நேரத்தை அளிப்பதோடு காயம் ஏற்படும் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது?
டிக்கெட் விற்பனை மந்தமாகவே உள்ளது. மியாமியில் நடைபெறும் தொடக்கப் போட்டிக்கு இன்னும் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்காமல் உள்ளன. இதன் காரணமாக போட்டிக்கான டிக்கெட் விலைகளை FIFA வெகுவாகக் குறைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கொண்ட நுழைவுக் கொள்கைகள், சில வெளிநாட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வருவதை தடுக்கக்கூடும். போட்டியை நடத்தும் நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதும் மந்தமான டிக்கெட் விற்பனைக்கு மற்றொரு காரணமாகும்.
June 19, 2025 11:03 AM IST

