அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ஆறாவது நாளான நேற்று ‘ஃபதா 1’ என்ற சூப்பர்சோனிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியது. அதேநேரம் நேற்று ஒரே நாளில் ஈரானின் 40 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், டெஹ்ரானில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு தலைமையகம், ரெட் கிரஸென்ட் அமைப்பின் அலுவலகம் ஆகியவை சேதமடைந்தன.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், டிரம்புக்கு பதில் அளிக்கும் வகையில் ஈரான் ஊடகங்களில் கமேனி பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. அதில், ஈரான் எப்போதும் யாருக்கும் சரணடையாது என கமேனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், அவர் தெரிவித்தார். திணிக்கப்பட்ட அமைதியையோ, போரையோ ஏற்கமாட்டோம் என்றும் கமேனி கூறியுள்ளார். இதில் அமெரிக்கா குறுக்கிட்டால் சரி செய்யவே முடியாத அளவுக்கு சேதத்தை சந்திக்க நேரிடும் என்றும் கமேனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
மேலும் போர் தொடங்கி விட்டதாக கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஈரான் பாதுகாப்பு படை அதிகாரி, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் ஜஃப்பாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா இணையுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்கா இணையலாம் அல்லது இணையாமல் இருக்கலாம் என்று தெரிவித்தார். ஈரான் யாருக்கும் சரணடையாது என்று கமேனி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறினர்.
ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் மீட்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக, 110 இந்திய மாணவர்கள் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
இதற்கிடையே, டெஹ்ரானில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இந்திய மாணவர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனவும், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
June 19, 2025 7:00 AM IST
“அமெரிக்கா குறுக்கிட்டால் சரி செய்யவே முடியாத சேதத்தை சந்திக்க நேரிடும்…” – ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரிக்கை

