Last Updated:
ஈரானில் மருத்துவ மாணவர்களின் விடுதி மீது இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய மாணவர்கள் 5 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலி கமேனி எங்கு ஒளிந்திருக்கிறார் என்று தனக்கு தெரியும் எனவும், அவர் எளிதான இலக்கு என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார். அவரை கொல்லப் போவதில்லை என்று கூறிய டிரம்ப், கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமேனி, ‘போர் தொடங்கி விட்டது’ என பதிவிட்டார். அதேபோல், செய்தியாளர்களை சந்தித்த ஈரான் பாதுகாப்பு படை அதிகாரி, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் ஜஃப்பாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரித்திருந்தார்.
இதற்கிடையில், ஈரானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க ஏற்கனவே இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், இன்று 110 இந்திய மாணவர்களை ஈரானில் இருந்து அர்மேனியன் எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையிலும் இந்தியா இறங்கியுள்ளது.
இந்நிலையில், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி இன்று, தொலைக்காட்சி வாயிலாக தனது நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், “ஈரானிய தேசத்தால் சரணடைய முடியாது என்பதையும், அவர்களின் எந்தவொரு இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஈரான், எப்படி திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராக உறுதியாக நிற்குமோ, அதேபோல், திணிக்கப்பட்ட போருக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும். இந்த நாடு யாருக்கும் சரணடையாது. ஈரானை பற்றியும், அதன் மக்கள் மற்றும் அதன் வரலாற்றையும் அறிந்த அறிவார்ந்த மக்கள் இந்த தேசத்துடன் அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. அப்படி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கேஷாவர்ஸ் தெருவில் உள்ள மருத்துவ மாணவர்களின் விடுதி மீது இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய மாணவர்கள் 5 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “ஈரானில் மருத்துவ மாணவர் விடுதி மீது நடந்த தாக்குதலில் இந்திய மாணவர்கள் 5 பேருக்கு லேசான காயம் அடைந்துள்ளனர். தெஹ்ரானில் இருந்து மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
June 18, 2025 9:36 PM IST


