நேர்மையாக வருமான வரி செலுத்துவோருக்கு கூட, வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வருவது பெரும்பாலும் பதற்றத்தையே ஏற்படுத்தும். ஆனால், உண்மையில் இந்த நோட்டீஸ்கள் பெரும்பாலும் வழக்கமானவையாகவே இருக்கின்றன. அவை நாம் செய்த பிழைகளை தெரிவிப்பதற்காக அல்ல, தவிர்க்கக்கூடிய மற்றும் சரிசெய்யக்கூடிய நேர்த்தியான செயல்பாடாகவே இருக்கும்.
இந்த அறிவிப்புகள் ஏன் வருகின்றன? அவை எதைச் சொல்ல விரும்புகின்றன? உங்களுக்கு ஏதேனும் நோட்டீஸ் வந்தால் அதை எப்படி நுட்பமாகக் கையாளலாம்? என்பதை வருமான வரி நிபுணர் CA, Dr.சுரேஷ் சுரானா, இந்தியா டுடேவுக்கு அளித்த விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
நோட்டீஸ்கள் ஏன் வருகின்றன?
இன்று, தரவுகள் சார்ந்த வரி நிர்வாகம் முன்னேற்றம் பெற்றுள்ள நிலையில், உங்களின் நிதி விவரங்களான சம்பளம், வங்கியிலிருந்து பெறப்படும் வட்டி, பங்குச் சந்தை வர்த்தகம், பரஸ்பர நிதி முதலீடுகள் உள்ளிட்ட அனைத்தும் வரித்துறையின் கண்காணிப்பில் உள்ளன.
இது குறித்து CA சுரானா கூறும்போது, “AIS, TIS, 26AS போன்ற வடிவங்களின் ஒருங்கிணைப்புடன், வரித்துறை கிடைக்கப்பெற்ற தரவுகளை ஒப்பிட்டு, தானாகவே நோட்டீஸ்களை அனுப்பும் அமைப்பாக மாறிவிட்டது. இது தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி அல்ல, விளக்கங்களைத் தேடுவதற்கான வழிமுறை” என்று அவர் கூறினார்.
அடிக்கடி வரும் நோட்டீஸ்கள் மற்றும் அவை சொல்வதென்ன?
பிரிவு 143(1): ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு (Intimation After Return Processing)
இது நீங்கள் தாக்கல் செய்த வருமானம் மற்றும் வருமான வரித்துறை கணக்கிடும் தரவுகளின் ஒப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. இதில், ஏதேனும் தவறுகள் இருந்தால் (எ.கா.TDS வேறுபாடுகள்), திருத்தம் அல்லது பணம் திரும்பப் பெறுதல் தடைப்படலாம். ஆனால், இது ஒன்றும் இறுதி முடிவு அல்ல, அதனை திருத்த வேண்டுமெனில் பிரிவு 139(5)-இன் கீழ் ITR-ஐ திருத்தித் தாக்கல் செய்யலாம்.
பிரிவு 142(1): மதிப்பீட்டிற்கு முன் தகவல் கேட்பு (Notice for Inquiry before Assessment)
நீங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்யாதபோது அல்லது வரி மதிப்பீட்டிற்காக கூடுதல் ஆவணங்கள் (படிவங்கள், வங்கி விவரங்கள், முதலீட்டு ஆதாரங்கள் போன்றவை) தேவையாக இருக்கும் சந்தர்ப்பத்தில், இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதில், குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கத் தவறினால், வரித் துறை பிரிவு 144-இன் கீழ் பெஸ்ட் ஜட்ஜ்மெண்ட் அசஸ்மெண்ட் எனப்படும் தனிப்பட்ட மதிப்பீட்டுச் செயல்முறையை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
பிரிவு 139(9): குறைபாடுள்ள வருமான வரி அறிக்கை (Defective ITR)
வருமான வரி அறிக்கை (ITR) தாக்கலுக்காகத் தவறான படிவத்தை பயன்படுத்துதல், ஒப்புமையற்ற வருமான விவரங்கள் அல்லது முக்கிய தகவல்கள் இல்லாமல் போவது போன்ற காரணங்களால் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களைச் செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், தாக்கல் செய்யப்பட்ட நபரின் வருமான வரி அறிக்கை செல்லுபடியாகாததாகக் கருதப்படும்.
பிரிவு 245: வரி நிலுவைத் தொகை – சரிசெய்தல் (Adjustment Against Tax Dues)
நீங்கள் வருமான வரியில் ரீஃபண்ட் பெற வேண்டியவராக இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் செலுத்தப்படாத வரி இருப்பின், வரித்துறை அதனை உங்கள் ரீஃபண்ட் தொகையுடன் சரிசெய்யலாம். இதற்காக வருமான வரித்துறை, பிரிவு 245-இன் கீழ் ஒரு அதிகாரப்பூர்வ நோட்டீஸை அனுப்புகிறது. இந்த நோட்டீஸை நீங்கள் பெற்றால், அதில் உள்ள விவரங்களை கவனமாகப் படிக்கவும். சரிசெய்தலை ஏற்கவோ அல்லது மறுக்கவோ நீங்கள் 21 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
பிரிவு 148: தவறவிட்ட வருமானம் – மறுமதிப்பீடு நோட்டீஸ் (Income Escaping Assessment)
வருமான வரித்துறை, உங்கள் கடந்த வரியாண்டுகளில் சில வருமானங்கள் கணக்கில் வரவில்லை என நம்பும்போது, அதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் இந்த நோட்டீஸை அனுப்புகிறது. இது ஒரு தீவிரமான நடவடிக்கையாகும். இந்த அறிவிப்பைப் பெற்றவுடன், அதில் குறிப்பிட்ட வரியாண்டுக்கான புதிய வருமான வரி அறிக்கை (ITR) ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். அதில் தவறவிட்ட வருமானத்தை உள்ளடக்கி, அதன் ஆதாரங்களைத் தெளிவாக விளக்க வேண்டும்.
நோட்டீஸுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
- வருமான வரித் துறையிடம் இருந்து வரும் நோட்டீஸை அலட்சியம் செய்ய வேண்டாம். ஏனெனில், ஒவ்வொரு அறிவிப்புக்கும் ஒரு காலக்கெடு உண்டு.
- வருமான வரிப் போர்ட்டலில் நுழைந்து DIN (Document Identification Number) எண் மூலமாக அதன் நம்பகத் தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம்.
- உங்கள் ஆதார ஆவணங்களை படிவம் 16 (Form 16), சம்பளச் சீட்டு, வங்கி அறிக்கைகள், முதலீட்டுச் சான்றுகள் போன்றவற்றை தொகுத்து, நேர்மையான பதிலை இ-போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.
- நோட்டீசுக்கு நீங்கள் பதிலளித்ததும், அதற்கான ஒப்புதல் ரசீது மற்றும் பதிலின் நகலை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
- வருமான வரித்துறை உங்களது பதிலுக்கு மறுபதில் அனுப்பி இருக்கிறதா என்பதை வருமான வரி இணையதளத்தில் அவ்வப்போது சோதனை செய்து பாருங்கள்.
முடிவாக, வருமான வரி நோட்டீஸ் என்பது துறையின் ஒரு வழக்கமான நடைமுறையே, உங்கள் பக்கம் தவறு இல்லையெனில் கவலை இல்லை. ஆனால், பதற்றம் இல்லாமல், தவறுகளை தவிர்த்து, விரைந்து பதிலளிப்பதே முக்கியம்.
நோட்டீஸில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உங்களுக்கு குழப்பத்தைத் தந்தால், யோசிக்காமல் அனுபவமுள்ள வரி நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
June 18, 2025 5:56 PM IST
வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்…? படிப்படியான வழிமுறை…!

