Last Updated:
மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றி, சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய் வழியாக டீசலை திருடியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மிகப்பெரிய டீசல் திருட்டு மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்ட இருவருமே உறவினர்கள் ஆவார்கள். மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றிய இவர்கள், சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய் வழியாக டீசலை திருடியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டீசல் திருட்டில் ஈடுபட்ட இருவரும், முதலில் ஜெய்ப்பூரின் பக்ரு பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தஹ்மி கலன் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளியில் இருந்து பார்க்கும்போது, அந்த இடம் சிறிய அளவிலான மினரல் வாட்டர் பாட்டில் உற்பத்தி செய்யும் ஆலை போல் தோன்றியது. ஆனால், உண்மையில் அங்கு ஒரு மிகப்பெரிய திருட்டு நடவடிக்கை நிலப்பரப்பிற்கு அடியில் நடந்து கொண்டிருந்தது.
இந்த கும்பல், சுமார் 25 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தடி குழாயை அடைய, தாங்கள் வாடகை எடுத்துள்ள வீட்டின் உள்ளே இருந்து ஒரு சுரங்கப் பாதையைத் தோண்டினர். பின்னர் பெட்ரோல் எடுத்துச் செல்லும் அந்த குழாயை உடைத்து, அதில் ஒரு வால்வை பொருத்தி, சட்டவிரோதமாக டீசலை உறிஞ்சத் தொடங்கினர். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க மினரல் வாட்டர் வியாபாரம் என்ற பெயரில் இந்த நடவடிக்கை மறைக்கப்பட்டது.
பெட்ரோல் எடுத்துச் செல்லும் குழாயில் அழுத்தம் குறைவதாகவும், இதனால் திருட்டுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்றும் கவலை தெரிவித்த இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை சேர்ந்த அதிகாரிகள், ஜூன் 6ஆம் தேதி துணை காவல் ஆணையர் (மேற்கு) அலுவலகத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. புகாரின்பேரில் விசாரணையை தொடங்கிய சிறப்பு போலீஸ் குழு, அந்த இடத்தை சோதனை செய்து சுரங்கப்பாதை மற்றும் சட்டவிரோத வால்வை கண்டுபிடித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராஜேஷ் உரங் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது டெல்லியைச் சேர்ந்த ஷ்ரவன் சிங் என்பது தெரியவந்தது. அவர் தனது மைத்துனர் தர்மேந்திர வர்மா என்ற ரிங்குவுடன் இணைந்து இந்த திருட்டை நடத்தியுள்ளார். மேலும், இங்கிருந்து திருடப்பட்ட டீசல் கள்ளச் சந்தையில் மலிவான விலையில் விற்கப்பட்டு, அதிக லாபம் ஈட்டப்பட்டதும் தெரியவந்தது. இந்தக் கும்பல் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரில் பல ஆண்டுகளாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் மீது பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டீசலை திருடுவதற்காகவே தண்ணீர் ஆலை நடத்துவதுபோல் திட்டமிடப்பட்டதாகவும், வெளியாட்களால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சுரங்கப்பாதை தோண்டப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவ்வளவு விரிவான திட்டம் அமைத்து டீசல் திருடிய கும்பலின் நடவடிக்கையை கண்டு அதிகாரிகள் திகைத்துப் போயுள்ளனர்.
June 17, 2025 8:44 PM IST


