Last Updated:
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ், ஈராக் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஈரான் உச்ச தலைவர் கமேனிக்கும் ஏற்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கி வரும் நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ், இன்று ஈரானின் தெஹ்ரானில் உள்ள குறிப்பிடத்தக்க இலக்குகளை தாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காட்ஸ்: “இன்று தெஹ்ரானுக்குள் – மூலோபாய, அரசு மற்றும் உள்கட்டமைப்பு – மிக முக்கியமான இலக்குகளைத் தாக்க உள்ளோம். தெஹ்ரான் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட அணுசக்தி இலக்குகள் உள்ளன. நாங்கள் அவற்றை அழிக்கும் விளிம்பில் இருக்கிறோம். ஃபோர்டோவும் நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று முன்னதாக இஸ்ரேலிய இராணுவ மற்றும் பாதுகாப்பு சேவைத் தளபதிகளுடனான சந்திப்பின் போது, காட்ஸ் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நேரடி எச்சரிக்கை விடுத்தார். முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனைப் போல விதியை அவர் ( கமேனி) சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
“தொடர்ந்து போர்க்குற்றங்களில் ஈடுபட்டு, இஸ்ரேல் பொதுமக்கள் மீது ஏவுகணைகளை வீசி வரும் ஈரானின் தலைவரை நான் எச்சரிக்கிறேன். இஸ்ரேலுக்கு எதிராக இதேபோல் செயல்பட்ட ஈரானின் அண்டை நாடு (ஈராக்) தலைவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் நினைவுகூர வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
ஈராக்கை ஆண்டு வந்த சதாம் உசேனின் ஆட்சி கடந்த 2003ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளே வந்த போது முடிவுக்கு வந்தது. அதன்பின் அவர் 2006ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இதே கதிதான் ஈரான் உச்ச தலைவர் கமேனிக்கும் ஏற்படும் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
June 17, 2025 9:35 PM IST
“சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும்” – ஈரான் தலைவருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்


