Last Updated:
மூன்று வருடங்களுக்கு முன் வாங்கிய கடனை கட்ட முடியாமல், கணவர் ஊரை விட்டு தலைமறைவாக அவரது மனைவிக்கு தொடர் தொல்லை.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டத்தில் குப்பம் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த முனிகந்தப்பா என்பவர் தன்னுடைய நண்பரான திம்மராயப்பாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்குக் கடன் கொடுத்துள்ளார்.
மாதம் 8 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முனிகந்தப்பா கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு ஒப்புக்கொண்ட திம்மராயப்பா வாங்கிய பணத்திற்கு முறையாக சில மாதங்கள் வட்டியைச் செலுத்தி வந்ததாகவும் தெரிகிறது. ஒருகட்டத்திற்கு மேல் கூலி வேலை செய்து வந்த திம்மராயப்பாவால் தான் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்த இயலவில்லை.
இதற்கிடையே, 80 ஆயிரம் ரூபாய்க்கான அசல், மற்றும் வட்டியைக் கேட்டு முனிகந்தப்பா கொடுத்த அழுத்தம் காரணமாக திம்மராயப்பா தன்னுடைய மனைவி ஸ்ரீஷா, மற்றும் இரண்டு குழந்தைகளை ஊரிலேயே விட்டுவிட்டு, எங்கேயோ தலைமறைவாகி விட்டார். அதன் பின்னர் கணவர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட சொல்லி அவரது மனைவி ஸ்ரீஷாவுக்கு முனிகந்தப்பா அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வட்டி கேட்டு தகராறு செய்து மன உளைச்சலுக்கும் ஆளாக்கி வந்துள்ளார்.
இதனால் திம்மராயப்பாவின் மனைவி ஸ்ரீஷா கூலி வேலை செய்து குழந்தைகளையும் காப்பாற்றி, கணவன் வாங்கிய கடனுக்கு வட்டியையும் செலுத்தி வந்தார். இதற்கிடையே, கடந்த மூன்று மாத காலமாக வேலையில்லாததால் ஸ்ரீஷாவால் வட்டி செலுத்த இயலவில்லை. அதில் ஆத்திரம் அடைந்த முனிகந்தப்பா, தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சென்று பணம் கேட்டு ஸ்ரீஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவேசத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் ஸ்ரீஷா தலை முடியை பிடித்து இழுத்துச் சென்று, சாலை ஓரத்தில் உள்ள வேப்ப மரத்தில் அவரை கட்டிவைத்து அவமானப்படுத்தினார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி ஸ்ரீஷாவை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பெயரில் குப்பம் போலீசார் வேப்ப மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீஷாவை மீட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட முனிகந்தப்பா, அவருடைய மனைவி வெங்கடம்மா, மகன் ராஜா, மருமகள் ஜெகதீஸ்வரி ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் வாங்கிய 80 ஆயிரம் ரூபாய் கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
June 17, 2025 8:17 PM IST


