ஈரானில் ராணுவக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் அணு உலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நில அதிர்வு உணரப்பட்டதால் பதற்ற சூழல் உருவானது.
அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இரு நாடுகளிடையே 4 ஆவது நாளாக மோதல் நீடித்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் லேசாகச் சேதமடைந்தது. இதையடுத்து தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மற்றொரு புறம், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் குண்டு வீசியதால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாகக் காட்சியளித்தன.
இதேபோன்று ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது இஸ்ரேல் குண்டு வீசியதில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
மேலும், ஈரான் ராணுவத்தின் குவாட் படைப்பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தைத் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில்,
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் இன்று மாலைக்குள் வெளியேறும்படி இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, ஈரானில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் தங்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள பிரத்யேக டெலிகிராம் குழுவில் சேருமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல, ஈரானில் உள்ள இந்தியர்கள், தூதரகத்தை தொடர்புகொள்ள அவசர உதவி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
June 16, 2025 1:30 PM IST
தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் மோதல்… “இன்று மாலைக்குள் வெளியேறுங்கள்” – இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்த தூதரகம்!

