மாதாந்திர தவணையை ஒரே ஒருமுறை செலுத்தத் தவறினால் அது ஒரு பெரிய விஷயமா? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், அப்படி நீங்கள் நினைப்பதே தவறுதான். ஒரே ஒரு தவணையாக இருந்தாலும் சரி, பலமுறை தவறவிட்டாலும், சரியான தேதியில் செலுத்தாத கடன் உங்களது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தவே வாய்ப்புள்ளது.
கடன் என்பது நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகவே இணைந்திருக்கிறது. வீடு கட்டுதல், புதுப்பித்தல், மருத்துவம், கல்வி என மக்களின் பல அத்தியாவசியத் தேவைகளுக்கு இது உதவிகரமாக இருக்கிறது. ஆனால், கடனை வாங்கிவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாமல் விட்டால், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கலாம். இதைப் பற்றிய கூடுதல் தகவலை இனி பார்ப்போம்.
கடனைச் செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்?
- கிரெடிட் ஸ்கோர் குறையும்
நீங்கள் ஒவ்வொரு மாதமும் EMI (மாதத் தவணை) செலுத்த வேண்டும் என கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நீங்கள் தவறவிடும் பட்சத்தில் உங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து, கிரெடிட் ஸ்கோரும் குறைய ஆரம்பிக்கும்.
- புதிய கடன் வாங்க இயலாது
உங்களது கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தாலே வங்கிகள் மற்றும் தனியார் கடன் நிறுவனங்கள் உங்களுக்கு கடன் வழங்க முன் வருகின்றன. ஆனால், நீங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவதால், புதிய கடன்கள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றுக்கு உங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம்.
- உங்களது தவறுகள் ஏழு ஆண்டுகள் வரை பதிவாகி இருக்கும்
ஒவ்வொரு தவணை தவறும் நிகழ்வும் உங்கள் கிரெடிட் ஸ்டேட்மெண்டில் அடுத்த 7 வருடங்களுக்குப் பதிவாகி இருக்கும். ஆனால், அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்குத் தொடரும்.
கடனைச் செலுத்தத் தவறிவிட்டீர்களா? மீண்டும் கிரெடிட் ஸ்கோரை மீட்டெடுப்பது எப்படி?
- உங்கள் கிரெடிட் ஸ்டேட்மெண்ட்டை கவனமாகப் பாருங்கள்
உங்கள் தவணையைத் திருப்பிச் செலுத்துவதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அது எப்போது, எப்படி ஏற்பட்டது, அது எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது பற்றித் தெளிவாக ஆராய வேண்டும். அதில் ஏதேனும் பிழை இருப்பின், உடனடியாக கிரெடிட் பியூரோவிடம் இதுகுறித்துப் புகார் அளிக்கலாம், அவர்கள் உங்களது கடன் ஸ்டேட்மெண்ட்டைச் சோதனை செய்து தவறுகள் இருப்பின் அதைச் சரி செய்வார்கள். இது உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயருவதற்குக் காரணமாகும்.
- புதிதாக நம்பகமான வரலாற்றை உருவாக்குதல்
உங்களது மாதாந்திர கடன் தவணை தவறவிடப்பட்டால், அதை மீட்டெடுக்க கிரெடிட் கார்டு பயன்பாடு (Secured credit card), தங்க நகைக்கடன் (gold loan), நிலையான வைப்புநிதி கடன் (FD loan) போன்ற பாதுகாக்கப்பட்ட கடன்கள் மூலம் உங்கள் நம்பகத்தன்மையை மீண்டும் நிரூபிக்கலாம்.
- தவணைகளைச் சரியான நேரத்தில் செலுத்துங்கள்
புதிய தவறுகளைத் தவிர்க்க, உங்கள் அனைத்து EMI-கள், கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் பில்கள் சரியான நேரத்தில் முறையாகச் செலுத்தப்படுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஆட்டோ டெபிட் அமைப்புகளும், எஸ்எம்எஸ் அல்லது இமெயில் போன்றவை நமது தவணையை நினைவூட்டுவதோடு தவறுகளைத் தவிர்க்கவும் உதவும்.
- ஒரே நேரத்தில் பல கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம்
ஒவ்வொரு கடன் விண்ணப்பமும் உங்களது கிரெடிட் ஸ்கோரைச் சிறிது குறைக்கும். எனவே, அத்தியாவசியமான கடன்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கவும்.
- தகுதி உள்ள திட்டங்களுக்கே முயற்சி செய்யவும்
உங்களது தற்போதைய கிரெடிட் ஸ்கோருக்குப் பொருத்தமான, ஒப்பந்தங்களைக் கொண்ட பாதுகாக்கப்பட்ட கடன்கள் (secured loans) அல்லது குறைவான ஆபத்து கொண்ட கார்டுகள் அல்லது கடன்கள் மீது கவனம் செலுத்துவது நல்லது.
நிதி ஒழுக்கம் தேவை
கடன் தவணை ஒருமுறை தவறுவதை, நிரந்தரப் பிரச்சனையாகக் கூறிவிட முடியாது என்றாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் உங்களது கடன் வாய்ப்புகள் மற்றும் கிரெடிட் ஸ்கோரைப் பாதுகாக்க உதவும். அதன்படி,
- செலவுகளைத் திட்டமிடுங்கள்
- தவணைகளைத் தவறாமல் செலுத்துங்கள்
- கிரெடிட் ஸ்டேட்மெண்ட்டை கவனமாகப் பாருங்கள்
- சந்தேகம் இருந்தால் நிதி ஆலோசகரை அணுகுங்கள்
June 16, 2025 5:00 PM IST
இஎம்ஐ செலுத்த தவறினாலும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுமா…? அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்…

