Last Updated:
யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், தோனி கேப்டனாக இருந்தபோது 7 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை அழிந்தது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை அழிக்கப்பட்டது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றத்தில் பல முக்கிய வீரர்கள் வெளியேறினார்கள் (வெளியேற்றப்பட்டார்கள்?). மேலும், அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி நீக்கப்படுவார் என்று அன்றைய பிசிசிஐ தேர்வுக்குழுவில் இருந்த மோஹிந்தர் அமர்நாத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, “நீங்கள் (பிசிசிஐ தேர்வுக்குழு) கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைஃப், விவிஎஸ் லக்ஷ்மன், ராகுல் டிராவிட் ஆகிய வீரர்களை 2011 உலகக்கோப்பை முடிந்தபிறகு அனுப்பிவிட்டீர்கள்.
2011 உலகக்கோப்பை முடிந்த பிறகு இந்திய அணியை அழித்துவிட்டீர்கள். அந்த 7 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை சாக்கடையில் வீசிவிட்டீர்கள். அதனால் தான் இந்திய அணி அப்போது தடுமாறியது. தோனி கேப்டனாக இருந்தபோது 5 தொடர்களில் நாம் தோல்வியடைந்தோம். அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று மோஹிந்தர் அமர்நாத் தெரிவித்தார்” என யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2011 உலகக்கோப்பை தொடரில் முக்கிய வீரர்களாக இருந்த கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன், என எந்த வீரரும் 2015 உலகக்கோப்பை தொடரில் இல்லை. இதையடுத்து, டெஸ்ட் தொடரில் 2014ஆம் ஆண்டு வரையும், ஒருநாள் தொடரில் 2017ஆம் ஆண்டு வரையும், தோனி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Mumbai,Maharashtra
June 16, 2025 1:00 PM IST


