Last Updated:
இந்த கிரிக்கெட் தொடர் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஓய்வுக்குப் பின்னர் நடைபெறக்கூடிய முதல் கிரிக்கெட் தொடர் ஆகும்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகத் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில், இந்த முறை தேசிய அணியில் வீரர்களைத் திறமையாகக் கையாண்டு தொடரை வெல்ல வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
அத்துடன் இந்த கிரிக்கெட் தொடர் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஓய்வுக்குப் பின்னர் நடைபெறக்கூடிய முதல் கிரிக்கெட் தொடர் ஆகும். இதன் காரணமாகவும் இந்தப் போட்டிகளின் முடிவுகளையும் வீரர்களின் ஆட்டத்தையும் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
இத்தகைய மாற்றங்கள் இந்திய அணியில் காணப்பட்டாலும், உள்ளூரில் விளையாடும் அணி என்கிற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு ரசிகர்களின் பேராதரவு இருக்கும். இயல்பாகவே இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகள் மீது ஆர்வம் காட்டக் கூடியவர்கள்.
இந்த நிலையில் இந்தத் தொடரில் யார் வெல்வார் என்பது குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார். அனுபவ வீரரான ஸ்டெய்ன் தெரிவித்துள்ள இந்தக் கருத்து இந்திய அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி-
ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (துணை கேப்டன்), துருவ் ஜூரல், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்.
June 15, 2025 8:31 PM IST


