Last Updated:
அகமதாபாத் விமான விபத்தில் பல குடும்பங்கள் துயரத்தில் ஆழ்ந்தன. மூத்த விமானி சுமீத் சபர்வால், அர்ஜூன், ரஞ்சிதா நாயர் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கின.
அகமதாபாத் விமான விபத்து, பல குடும்பங்களை மீளா துயரத்தில் ஆழ்த்தினாலும், சில இறப்புகள் நெஞ்சை பிளக்கச் செய்கின்றன. இப்படிதான் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 241 பேரின் கனவுகளும் கருகிபோகின. அதிலும் சிலரது மரண செய்திகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. அதில் விமானத்தை இயக்கிய மூத்த விமானி சுமீத் சபர்வால் தனது தந்தையிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள் தற்போது வெளி உலகிற்கு தெரிந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை மூத்த விமானி சுமீத் சபரிவால் இயக்கி உள்ளார். 54 வயதான சுமீத் சபரிவால் தனது வயதான தந்தையிடம் இன்னும் சில தினங்களில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உங்களிடம் முழு நேரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது தந்தை சோகத்தில் ஆழ்ந்துள்ளார். கேப்டன சுமீத் சபரிவால் மற்றும் அவரது வயதான தந்தை மும்பையில் வசித்து வருகின்றனர். சுமீத் சபரிவாலின் தந்தைக்கு பிரபலங்கள் பலர் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதே ஏர் இந்தியா விமானத்தில் குஜராத்தின் அர்மேலி மாவட்டத்தின் வாடியா நகரைச் சேர்ந்த அர்ஜூன், மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வந்தார். கடந்த வாரம் அர்ஜூனின் மனைவி உயிரிழந்த நிலையில், அவரது கடைசி ஆசைப்படி, அஸ்தியை கரைப்பதற்காக, பிள்ளைகளை லண்டனிலேயே விட்டுவிட்டு சொந்த ஊர் வந்தார். வாடியாவில் மனைவியின் அஸ்தியை கரைத்துவிட்டு, ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் புறப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஏற்கனவே தாயை இழந்த 4 மற்றும் 8 வயது பெண் குழந்தைகள் தற்போது, தந்தையையும் இழந்து நிற்கதியாக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல, அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதான ரஞ்சிதா நாயரும் ஒருவர். 9 ஆண்டுகள் ஓமனில் நர்சாக பணியாற்றிய இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லண்டனுக்கு சென்றார். அங்கு செவிலியராக வேலை பார்த்து வந்த ரஞ்சிதா நாயருக்கு, கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக, சொந்த ஊரான கோழஞ்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலேயே வேலை கிடைத்தது. அந்த வேலையில் சேருவதற்காக, லண்டன் வேலையை ராஜினாமா செய்வதற்காக சென்றபோதுதான் விமான விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார். விமான விபத்தில் பலியான ரஞ்சிதாவுக்கு இந்து சூதன் என்ற மகனும், இதிகா என்ற மகளும் உள்ளனர். மகன் 10-ம் வகுப்பும், மகள் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ரஞ்சிதாவின் இறப்பைக் கேட்டு ரஞ்சிதாவின் தாய் துளசி மற்றும் குழந்தைகள் உடைந்து அழுத சம்பவம் காண்போரை கண்கலங்கவைத்தது.
இதேபோல, மருமகளின் வளைகாப்புக்காக சென்ற ரமேஷ் தாக்கர் மற்றும் அவரது மனைவி லபுபென், இங்கிலாந்தில் செட்டில் ஆக சென்ற, இளம் தம்பதி கம்லேஷ் சவுத்ரி மற்றும் துபாபென், மகனைப் பார்ப்பதற்காக முதன்முறையாக விமானத்தில் பறந்த விவசாயி தினேஷ் குமார், மகன் வாங்கிய புதிய வீட்டை பார்ப்பதற்காக சென்ற 71 வயதான ராட்டிலால் படேல் உள்ளிட்டோரின் மரணமும், அவர்கள் குடும்பத்தில் நீங்கா வடுவாகவே நீட்டிக்கிறது…
Ahmedabad,Gujarat
June 14, 2025 9:48 AM IST
“வேலைய விடப்போறேன்… இனிமே உங்க கூட தான் இருப்பேன்“ அப்பாவிடம் உயிரிழந்த விமானி சொன்ன கடைசி வார்த்தை


