Last Updated:
உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டா பிரபலம் கபேன் காபி லேம், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டா பிரபலம், கபேன் காபி லேம். 25 வயதான இவர் பிறந்து 1 வயதாக இருக்கும்போது அவரது குடும்பத்தினர் இத்தாலிக்குக் குடிபெயர்ந்ததால், இத்தாலி நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். தொழிற்சாலையில் CNC இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்தவர் கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் டிக்டாக்கில் வீடியோ பதிவிட ஆரம்பித்தார்.
சிக்கலான வாழ்க்கைச் சம்பவங்களை இதைவிட எளிமையாக யாராலும் புரிய வைக்க முடியாது என யோசிக்கும் அளவுக்கு வார்த்தைகளற்ற சைகையால் துவம்சம் செய்து வீடியோ பதிவிட ஆரம்பித்தார். விழுந்து புறண்டு ஊதிப் பெரிதாக்கும் சம்பவங்களைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருப்பார்கள். இது ஒரு விஷயமா? என சைகையால் கேள்வி கேட்பதோடு, அதைக் கிண்டல் செய்து பதிவிடும் இவரது வீடியோவால், பலரும் காபி லேம்மிற்கு ரசிகர்களாகினர்.
காபி லேமின் தனித்துவமான கையசைவு சைகையைப் பின்பற்றி, அவரைப் போலவே வீடியோ வெளியிட்டுப் பலரும் பிரபலமாகி உள்ளனர். அதில் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் உண்டு. ஹர்திக் பாண்டியாவும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அவரைப்போலத்தான் போஸ் கொடுத்தார். டிக்டாக்கில் 162 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்கள், இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை, காபி லேம் வைத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காபி லேம்மைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏப்ரல் 30-ம் தேதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசா காலத்தையும் தாண்டி, விதிமுறைகளை மீறி அதிக நாள்கள் அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளார்.
இதனால் அவரைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுக்குப் பின், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவதாக அவர் கூறிக் கொண்டதால் காபி லேம்மை விடுவித்துள்ளனர். தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறி உள்ளார். காபி லேம் கைது செய்யப்பட்ட தகவல் தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி அவரது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
June 12, 2025 1:55 PM IST


