உற்ற தோழர்களாக இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த வாரம் எலியும், பூனையுமாக மாறி சண்டை போட்டு கொண்டனர்.
ட்ரம்பின் “ஒன் பிக் அன்ட் பியூட்டிஃபுல் பில்’லிற்கு எலான் மஸ்க் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியது இந்தச் சண்டை. ‘எலான் மஸ்க் ஒன் பியூட்டிஃபுல் பில்லுக்கு அதிருப்தி தெரிவித்தது எனக்கு வருத்தம். எலெக்ட்ரிக் கார்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்ததனால் தான் அவர் இப்படி பேசுகிறார்’ என்று ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப் பேசிய இந்த வீடியோக்களை டேக் செய்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து எதிர்க்கருத்துளைத் தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில், எப்ஸ்டீன் என்ற பாலியல் மற்றும் மனிதக் கடத்தல் குற்றவாளியின் ஃபைலில் ட்ரம்ப் பெயர் உள்ளது. அதனால் தான், அந்த ஃபைல் வெளியிடப்படவில்லை என்றெல்லாம் எலான் மஸ்க் ட்ரம்பை கடுமையாக சாடியிருந்தார்.

இன்னும் ஒரு படி மேலே போய், புதிய கட்சி தொடங்கவும் திட்டமிட்டார் எலான் மஸ்க். இதற்கடுத்து என்ன ஆனது… ஏது ஆனது என்று தெரியவில்லை. தற்போது எலான் மஸ்க் பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அதிபர் ட்ரம்ப் குறித்து கடந்த வாரம் நான் போட்ட சில பதிவுகள் குறித்து நான் வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் இந்தப் பதிவு இருவருக்கும் இடையே சமாதனமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

