Last Updated:
விண்கலத்தை இயக்குபவராக சுபான்ஷு சுக்லா செயல்பட இருந்தார். 28 மணிநேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
பல்வேறு நாடுகளும் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதற்கு வீரர்களை அழைத்துச் செல்லும் வகையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ‘இஸ்ரோ’ இணைந்து ஆக்ஸியம் – 4 என்ற திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதில், முதன்முறையாக இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் செல்கின்றனர். இந்தக் குழு, விண்வெளி மையத்தில் 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, நேற்று இந்தக் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்தப் பயணம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் புறப்பட இருந்தது. இதில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் பயணிக்கின்றனர். விண்கலத்தை இயக்குபவராக சுபான்ஷு சுக்லா செயல்பட இருந்தார். 28 மணிநேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்தத் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதிக்கட்ட சோதனையின்போது ஃபால்கன் 9 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. கசிவு சரிசெய்யும் வரை திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வானிலை காரணமாக ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டு இன்று (ஜூன்11) மாலை 5.30 மணிக்கு ஏவப்படவிருந்த நிலையில், தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 11, 2025 7:33 AM IST
சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் 2ம் முறையாக ஒத்திவைப்பு.. இதுதான் காரணம்!

