இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர்கள் முதன்மை இடங்களைப் பிடித்திருக்கும் நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வினோத் அகர்வால் என்பவரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரைப் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாவிட்டாலும், இவரும் மிகப்பெரிய அளவில் செல்வத்தைச் சேர்த்த தொழிலதிபர்களில் ஒருவராக உள்ளார். ஹூருன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2024-இன் படி, அகர்வால் கோல் நிறுவனத்தின் நிறுவனர் வினோத் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று ரூ.7,100 கோடி நிகர சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2023-ல் தேசிய அளவில் 300-வது இடத்தில் இருந்த இவர், 2024-ல் 394-வது இடத்திற்குச் சென்றாலும், அவரது சொத்து மதிப்பு ரூ.400 கோடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவினைக்குப் பிந்தைய பயணம்
பாரத நாட்டை இரண்டாகப் பிரித்த போது எல்லாவற்றையும் இழந்த ஒரு குடும்பத்தில் 15 வயது சிறுவனாகத் தனது உழைப்பைத் தொடங்கிய வினோத் அகர்வால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது அயராத உழைப்பால், தற்போது நிலக்கரித் துறையில் முக்கிய நபராக வலம் வருகிறார். 1974-ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அகர்வால் கோல் நிறுவனம், இன்று இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 20 துறைமுகங்களில் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ள இந்த நிறுவனம், 1,500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன், டாடா குழுமம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கும் நிலக்கரியை வழங்கி வருகிறது. சிஇஓ இதழின் அறிக்கையின்படி, அகர்வால் கோல் நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் ரூ.14,000 கோடி ஆகும்.
வியாபாரத்தில் மட்டும் அல்ல… கல்வியிலும் பங்களிக்கும் அகர்வால் குடும்பம்!
தொழில் மட்டுமன்றி, கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலும் அகர்வால் குடும்பம் தங்களை நிலைநிறுத்தியுள்ளது. 2006-ல், இந்தூரில் நிறுவப்பட்ட சாமேலி தேவி கல்விக் குழுமம், தற்போது 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி வழங்கி வருகிறது. தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த மற்றும் சமூக மாற்றத்தைத் தூண்டும் மாணவர்களை உருவாக்குவதே இதன் குறிக்கோளாகும். வினோத் அகர்வாலின் மகன் தபன் அகர்வால், குடும்பத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான எமரால்டு டெவலப்பர்ஸின் தலைவராக இருக்கிறார். இந்த நிறுவனம் நான்கு மில்லியன் சதுர அடியில் ரியல் எஸ்டேட் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக, தபன் அகர்வால் கோல் நிறுவனத்தின் தென்னாப்பிரிக்கக் கிளையின் சிஓஓ மற்றும் கார்ப்பரேட் பிரிவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தின் மற்ற முக்கிய பணக்காரர்கள்
திலீப் சூர்யவன்ஷி – திலீப் பில்ட்கான் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் இவர், ரூ.3,800 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஷியாம்சுந்தர் முந்த்ரா – உஜாஸ் எனர்ஜியின் உரிமையாளர் இவர், ரூ.3,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறார்.
பிரிவினையின் கொடுமைகளை அனுபவித்த குடும்பத்தைச் சேர்ந்த வினோத் அகர்வால், இன்று தனது உழைப்பால் மத்தியப் பிரதேசத்தின் மிகச்சிறந்த மற்றும் முன்னணி தொழிலதிபராக வலம் வருகிறார்.
June 11, 2025 7:20 AM IST
அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தவர்.. இன்று ரூ.7,100 கோடிக்கு சொந்தக்காரர்.. ம.பி.யின் முக்கிய பணக்காரரான இவர் யார்?

