பொதுவாக, நாம் தங்கத்தை வாங்கினால் அதை நமது வீட்டு பீரோவில் அல்லது பேங்க் லாக்கரில்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால், உலகின் செல்வந்தர்கள் பலரும் வாங்கும் தங்கம் சிங்கப்பூரில் உள்ள ஒரு கட்டடத்தில் பாதுகாக்கப்படுகிறது.
ஆம், சிங்கப்பூரில் உள்ள ஆறு மாடிகளைக் கொண்ட ஒரு ரகசிய கட்டடத்தில்தான், ரூ.12,500 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட பிற விலைமதிப்பற்ற உலோகங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தை “தி ரிசர்வ்” என்று அழைக்கிறார்கள்.
‘தி ரிசர்வ்’ – கிழக்கின் ஜெனீவா
சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த ஆறு மாடி கட்டடம், தனியார் பாதுகாப்புப் பெட்டகங்களைக் கொண்ட ஒரு பாதுகாப்பான இடமாகும். உலகின் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்கள் தங்கம் மற்றும் வெள்ளி பிஸ்கட்டுகள் மற்றும் விலை மதிக்க முடியாத பிற உலோகங்களையும் இங்கு பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.
இதை நிறுவியவர் கிரிகர் கிரிகர்சன், இவரது நிறுவனம் “சில்வர் புல்லியன்” என்பதன் கீழ் செயல்படுகிறது. இந்தக் கட்டடத்தில் ஆயிரக்கணக்கான லாக்கர்கள், பாதுகாப்புப் பெட்டிகள் உள்ளன. கடந்த சில மாதங்களில், குறிப்பாக ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரையில், இங்கு தங்களது விலை மதிக்க முடியாத பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கோரிக்கையில் 88% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களுக்கு (HNIs) இது “கிழக்கின் ஜெனீவா” என்று அழைக்கப்படுகிறது.
ஏன் சிங்கப்பூர்?
சுவிட்சர்லாந்தைத் தொடர்ந்து, சிங்கப்பூரும் உலகப் பணக்காரர்களின் “முக்கியமான பாதுகாப்பான மையமாக” மாறியுள்ளது.
இதற்கான முக்கிய காரணங்கள்:
- உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலை – வர்த்தகப் போர், பொருளாதார மந்தநிலை போன்றவை செல்வந்தர்களை நிலைத்தன்மையுள்ள இடங்களைத் தேட வைக்கின்றன.
- வங்கிகள் மீதான நம்பிக்கையிழப்பு – லெபனான், அல்ஜீரியா, எகிப்து போன்ற நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் தற்போது வங்கிகளை நம்பாமல் சுயமாகத் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க முன்வந்துள்ளனர்.
- தங்கத்தின் மீதான நம்பிக்கை – ஈடிஎஃப் (ETF) மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற காகித தங்கத்தைவிட உண்மையான தங்கத்தையே வாங்க விரும்புகின்றனர், ஏனெனில் இது குறைந்த ஆபத்தைக் கொண்டுள்ளது.
சவால்கள் மற்றும் நன்மைகள்
தங்கத்தை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பாதுகாப்பாக நகர்த்துவது என்பது சுலபமான விஷயமல்ல. இத்தகைய சேமிப்புகள் குறுகிய காலத்திற்கானவை அல்ல. தங்கத்தை வாங்கி, அதை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டு செல்ல கப்பல், பாதுகாப்பு மற்றும் காப்பகச் செலவுகள் அதிகம். எனவே, இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கே ஏற்றது. இருப்பினும், அரசியல் மற்றும் சட்ட நிலைத்தன்மை கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகள், இந்த வகை முதலீடுகளுக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான தீர்வாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன.
June 10, 2025 5:04 PM IST
ரூ.12,50,00,00,000 மதிப்புள்ள தங்கம் உள்ள ரகசிய அறை… பணக்காரர்கள் இதை எங்கே பாதுகாக்கிறார்கள் தெரியுமா…?

